திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில் அரிய வகை பறவைகள் வளர்க்கும் மாற்றுத்திறனாளி

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில் அரிய வகை பறவைகளுக்காக பண்ணை அமைத்து மாற்றுத்திறனாளி சாதனை படைத்து வருகிறார். திருச்செந்தூர் அருகே ஆலந்தலை வடக்குத்தெருவை சேர்ந்த கில்பெர்ட் மகன் ரவி (35) மாற்றுத்திறனாளி. இவர் அங்கு பறவைகள் பண்ணை வைத்துள்ளார். ரவி கடந்த 23 வருடங்களாக பறவைகள் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். ஆரம்ப காலத்தில் ரூ.300 சம்பளத்திற்கு வேலை பார்க்கும் போதே பிற உயிர்களுக்கு தன்னால் முடிந்த வரையில் உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றிட தான் பார்த்த சிறு வேலையையும் உதறி தள்ளி விட்டு இரு குருவி குஞ்சுகளை வாங்கி அதற்கு உணவு கொடுத்து வளர்க்க ஆரம்பித்தவருக்கு அதில் ஈடுபாடு வரவே கேஎஸ்ஆர் பார்ம் என்ற பெயரில் பறவைகள் வளர்க்கும் பண்ணை ஒன்றை நிறுவி இன்று 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குருவிகளை வளர்த்து ஆப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கும் டெல்லி, மும்பை போன்ற வெளி மாநிலங்களுக்கும் விற்பனை செய்து வருகிறார்.

 வங்கியில் சுய தொழிலுக்கான கடன் உதவி பெற்று பண்ணை அமைப் பதற்கான வேலையையும் குருவிகள் வளர்ப்பதற்கான கூண்டுகளையும் தானே முன்னின்று செய்து குருவிகளை வளர்த்து அதன் முட்டைகளை சரியான முறையில் பாதுகாத்து குஞ்சு பொரிக்க செய்து குருவிகள் எண்ணிக்கையை பெருக செய்துள்ளார். இது மட்டுமில்லாமல் பிரிஞ்சர்ஸ், ஆப்பிரிக்கன் வயலட் மாஸ்க், லூட்டினா, பிஷ்ஷர், பார்ப்புளு, பிஷ்ஷர் பியான்ட் போன்ற உயர்ந்த ரக குருவி இனங்களை வளர்த்து அவற்றை இனக்கலப்பு செய்து புதிய ரக இனங்களை இனப்பெருக்கம் மூலம் உருவாக்கியும் வருகிறார். கலப்பு இனங்கள் மூலம் உருவாகும் புதிய ரக குருவிகள் கண்ணைக்கவரும் புதிய நிறங்களில் இருப்பதால் அதிக அளவில் வாடிக்கையாளரை ஈர்த்து விற்பனையும் அதிக அளவில் நடைபெறுகிறது. இக்குருவி இனங்களுக்கு சாமை, குதிரைவாலி, சோளம், வரகு, கம்பு, நெல், பச்சை பட்டாணி போன்ற சத்தான தானியங்களை உணவாக அளித்து வருகிறார்.

 இதுபோன்ற குருவிகளை தன் உயிர் போன்று வளர்த்து கடினமான சூழ்நிலையிலும்  ஒவ்வொரு இனக் குருவிகளும் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் கால அளவை கணக்கிட்டு அக்காலம் வரை அதனை கவனமுடன் பாதுகாத்து குஞ்சுகளை திறமையுடன் வளர்த்து மேலும் இனப்பெருக்கமும் செய்து வாட்ஸ் ஆப், பேஸ் புக் போன்ற சமூக வலைதளங்கள்  மூலம் விளம்பரங்கள் செய்து தனக்கென விற்பனையில் தனிப் பெயரும் பெற்று உள்ளார். இன்றைய சமூகத்தில் வேலையில்லா பட்டதாரிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தான் மாற்று திறனாளியாக இருந்தாலும் பிறர் உதவி இன்றி கடினமாக உழைத்து சுயதொழிலில் தனக்கென தனி முத்திரை பதித்து அனைத்து இளைஞர்களுக்கும் முன்னுதாரணமாக இருந்து வரும் ரவியை இப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Related Stories:

More
>