×

தேர்தல் வெற்றி, தோல்விகள் பொது வாழ்வில் ஒரு பொருட்டல்ல: சட்டப்பேரவை தேர்தலில் அமைக்கப்பட்ட அதிமுக கூட்டணி தொடர்கிறது: ஓபிஎஸ் - ஈபிஎஸ் கூட்டாக அறிக்கை

சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் அமைக்கப்பட்ட அதிமுக கூட்டணி தொடர்வதாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் நடத்திய பொற்கால ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கப்பட்டது.

கழகத்தின் மக்கள் தொண்டில் தங்களை இணைத்துக்கொள்ள ஆர்வம் கொண்ட பல்வேறு அமைப்புகளும், தோழமை இயக்கங்களும் கழகத்தின் தலைமையில் அமைந்த கூட்டணிக்கு ஆதரவு அளித்தன. தொடர்ந்து பத்து ஆண்டுகள் தமிழ் நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் இருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழக மக்களின் எதிர்காலம் சிறக்கவும் எண்ணற்ற பணிகளை ஆற்றியது. இந்தப் பணிகளுக்கெல்லாம் பாராட்டு தெரிவிப்பதுபோல, தமிழ் நாட்டு வாக்காளர்கள் அளித்த பேராதரவு காரணமாக 75 சட்டமன்ற உறுப்பினர்கள் கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களாக இன்று சட்டமன்றத்தில் இடம்பெற்றிருக்கின்றனர்.

வெறும் 3 விழுக்காடு வாக்குகள் வித்தியாசத்தில்தானே கழகம் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில், மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் நாம் ஆட்சியை இழந்திருந்தாலும், மக்களின் பேரன்பு கழகத்திற்கு தொடர்கிறது. தேர்தல் முடிவுகள் சற்றே தொய்வையும், மனச் சோர்வையும் ஏற்படுத்தி இருந்தாலும், கொண்ட கொள்கையின் காரணமாகவும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் மீது நாம் கொண்ட விசுவாசம் காரணமாகவும், கழகத் தோழர்களின் பொது வாழ்வு என்னும் புனிதப் பயணம் வீருநடை போடுகிறது.

இப்பொழுது நாம் ஆற்ற வேண்டிய பணிகள் நம் முன் அணிவகுத்து நிற்கின்றன. அரசியல் வாழ்வு என்பதே இடைநிற்றல் இல்லாத லட்சியப் பயணம் தானே! இலக்கினை அடையும் வரை வீரனுக்கு ஏது ஓய்வும், சோர்வும்! நம் இதயத்தின் தசையெல்லாம் புரட்சித் தலைவரின் அரசியல் பாடம் மட்டுமே.  நம் கண்முன் தெரிவதெல்லாம் புரட்சித் தலைவி அம்மாவின் பூமுகம் தான். நம் இலக்கு புரட்சித் தலைவியின் பொற்கால அரசை மீண்டும் அமைப்பதும், எதிரிகளால் இருள் சூழ்ந்திருக்கும் தமிழ் நாட்டை ஒளிமயமான பொன்னுலகிற்கு இட்டுச் செல்வதாக மட்டுமே இருக்கிறது.  

வேறு எந்த சிந்தனையும் நம் மனதில் ஏற்படத் தேவையில்லை. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகத்தின் தலைமையில் 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு அமைக்கப்பட்ட கூட்டணி தொடர்கிறது என்பதிலும்; நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாய் இருந்து, தமிழ் நாட்டின் உயர்வுக்கென உழைப்போம் என்பதிலும், யாருக்கும், எப்போதும், எவ்வித ஐயமும் எழத் தேவையில்லை என்பதை மீண்டும் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : OBS - EPS , The AIADMK-EPS joint statement said that the AIADMK alliance formed in the assembly elections will continue
× RELATED இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு குறித்து ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆலோசனை