×

கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட உள்ளது சட்டத்திற்கு புறம்பானது: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி

சென்னை: கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட உள்ளது சட்டத்திற்கு புறம்பானது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். காவிரி அணையில் மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா அரசு அணை கட்ட திட்டம் வகுத்து அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதனால் கர்நாடகாவிற்கு அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் டெல்லி சென்ற தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நேற்று ஒன்றிய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து மனு கொடுத்தார். அதன்பின்னர் நிருபர்களை சந்தித்த துரைமுருகன், தமிழக அரசின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்காது என்று மத்திய அமைச்சர் உறுதியளித்ததாக தெரிவித்தார்.  

ஆனால் நேற்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று அறிக்கை வெளியிட்டார். இன்று டெல்லியில் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசினார். டெல்லி பயணம் நிறைவடைந்து தமிழ்நாடு திரும்பிய துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட அனுமதி தர மாட்டோம் என ஒன்றிய அமைச்சர் உறுதி அளித்துள்ளார். மேகதாது உள்ளிட்ட பிரச்சனைகளை மத்திய அமைச்சர் விரிவாக அறிந்து வைத்திருப்பது மகிழ்ச்சி. நதிநீர் பிரச்சனை தொடர்பான தமிழ்நாட்டின் அனைத்து கோரிக்கைகளையும் ஒன்றிய அமைச்சர் ஏற்றுக் கொண்டார்.

கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட உள்ளது சட்டத்திற்கு புறம்பானது. நீண்டகாலம் அரசியலில் உள்ள எடியூரப்பா கருத்து தெரிவித்திருப்பது வருத்தத்திற்குரியது. மேகதாது அணை திட்டம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்தது தவறு. ஒன்றிய அரசு, தமிழ்நாடு அரசிடம் அனுமதி வாங்காமல் மார்கண்டேய நதியில் கர்நாடகா அணை கட்டியுள்ளது என கூறினார். தொடர்ந்து எல்.முருகன் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்; தமிழகத்தில் இருந்து யாரோ ஒருவர் மத்திய அமைச்சராக வந்தால் அது மகிழ்ச்சி தான் எனவும் கூறினார்.


Tags : Karnataka ,Maghrathu Dam ,Water Resources Minister ,Durimurugan , Government of Karnataka is planning to build Megha Dadu Dam is illegal: Interview with Water Resources Minister Dhuramurugan
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...