×

கோபா அமெரிக்கா கால்பந்து; கொலம்பியாவை வீழ்த்தி பைனலில் அர்ஜென்டினா: பெனால்டி ஷூட் அவுட்டில் 3-2 என வெற்றி

பிரேசிலியா: தென்அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்த 10 அணிகள் பங்கேற்ற கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் பிரேசிலில் நடந்து வருகிறது. இதில் பிரேசில், பெரு, அர்ஜென்டினா, கொலம்பியா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. நேற்று நடந்த முதல் அரையிறுதியில் பிரேசில் 1-0 என்ற கோல் கணக்கில், பெரு அணியை வீழ்த்தி பைனலுக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் 2வது அரையிறுதி போட்டி பிரேசிலியா நகரில் இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கி நடந்தது. இதில் பிபா தரவரிசையில் 9வது இடத்தில் உள்ள அர்ஜென்டினாவும், 12வது இடத்தில் உள்ள கொலம்பியாவும் பலப்பரீட்சை நடத்தினர்.

விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில் தொடக்கத்தில அர்ஜென்டினா ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் மெஸ்சி  எதிரணியின் எல்லைக்குள் பந்தை கடத்திச்சென்று சக வீரர் மார்டினெசுக்கு பாஸ் செய்தார். அடுத்த நொடியில் மார்டினெஸ் அதை கோலாக மாற்றினார். கொலம்பியாஅணி கேப்டனும் கோல் கீப்பருமான டேவிட் ஆஸ்பினோவால் அதனை தடுக்க முடியவில்லை. இதனால் முதல் பாதியில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை பெற்றது. 2வது பாதியில் பதில் கோல் அடிக்க கொலம்பிய வீரர்கள் போராடினர். ஆட்டத்தின்  61வது நிமிடத்தில் கொலம்பியாவின் லூயிஸ் டியஸ் அற்புதமாக கோல் அடித்து சமன் செய்தார்.  

பின்னர் இரு அணிகளும் போராடியும் கடைசி நிமிடம் வரை கோல் அடிக்க முடியவில்லை. கூடுதலாக வழங்கப்பட்ட 4 நிமிடங்களிலும் கோல் விழவில்லை. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் அர்ஜென்டினா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. வரும் 11ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் இறுதி போட்டியில் பிரேசிலுடன் அர்ஜென்டினா பலப்பரீட்சை நடத்த உள்ளது. முன்னதாக 10ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு 3வது இடத்திற்கான போட்டியில் பெரு-கொலம்பியா அணிகள் மோத உள்ளன.

Tags : Copa America ,Argentina ,Colombia , Copa America football; Argentina beat Colombia 3-2 in final: Penalty shootout
× RELATED அமெரிக்க அதிபர் தேர்தல்; கட்சி...