பெனால்டி ஷூட் அவுட்டில் ஸ்பெயினை வீழ்த்தி இத்தாலி பைனலுக்கு முன்னேறியது

லண்டன்: லண்டனில் நேற்று நடந்த பரபரப்பான யூரோ கோப்பை கால்பந்து செமி பைனலில், பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் இத்தாலி ஸ்பெயினை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு யூரோ கோப்பை பைனலுக்கு இத்தாலி முன்னேறியுள்ளது. இன்று நள்ளிரவு லண்டனில் நடைபெற உள்ள 2வது செமி பைனலில் இங்கிலாந்து-டென்மார்க் அணிகள் மோதவுள்ளன. லண்டனில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 12.30 மணிக்கு துவங்கிய முதல் செமி பைனலில் இத்தாலி-ஸ்பெயின் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக இருந்தது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் ஏதும் போடவில்லை.

44வது நிமிடத்தில் இத்தாலி வீரர் எமர்சன் அடித்த கோல் ஷாட், கிராஸ் பாரில் பட்டு வெளியே பறந்தது. 2ம் பாதியிலும் இரு அணி வீரர்களும் கடுமையாக போராடினார்கள். 60வது நிமிடத்தில் இத்தாலியின் மிட்ஃபீல்டர் பெடரிகோ செய்சா, அற்புதமாக ஒரு கோல் அடித்து, அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். 80வது நிமிடத்தில் ஸ்பெயினின் ஃபார்வர்ட் அல்வாரோ மொராட்டா, தனி ஒருவராக பந்தை கடத்தி வந்து, அட்டகாசமாக கோல் அடிக்க, இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை அடைந்தன. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. கூடுதல் நேரத்தில் இரு அணிகளும் கோல் ஏதும் போடவில்லை. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்பட்டது.

பெனால்டி ஷூட் அவுட்டில் இரு அணிகளின் வீரர்களுமே முதல் வாய்ப்பில் கோல் அடிக்கவில்லை. இத்தாலி வீரர் மானுவெல் லோகாடெல்லியும், ஸ்பெயின் வீரர் டேனி ஒல்மோவும் முதல் வாய்ப்பை வீணடித்தனர். அடுத்து இத்தாலியின் ஆண்ட்ரியா பெலோட்டி கோல் அடித்தார். ஸ்பெயினின் ஜெரார்ட் மோரேனோ கோல் அடித்தார். தொடர்ந்து இத்தாலி வீரர் ஃபிரெட்ரிகோ பெர்னார்டெஸ்கி கோல் அடிக்க, ஸ்பெயினின் அல்வாரோ மொரெட்டோ ஏமாற்றினார்.  அதன் பின்னர் இத்தாலி வீரர் ஜோர்கின்ஹோ, அற்புதமாக ஸ்பெயினின் கோல் கீப்பரை ஏமாற்றி, மிகவும் மெதுவாக, பதற்றமே இல்லாமல் கோல் அடித்தார்.

இறுதியில் பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி, நடப்பு யூரோ கால்பந்து கோப்பை பைனலுக்கு வெற்றிகரமாக தகுதி பெற்று விட்டது. இத்தாலியில் பொதுமக்கள் அனைவரும் சாலையில் திரண்டு வந்து, இந்த வெற்றியை விடிய விடிய கொண்டாடினர்.

இன்று இங்கிலாந்து- டென்மார்க் மோதல்

லண்டனில் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 12.30 மணிக்கு (இன்று நள்ளிரவு) நடைபெற உள்ள 2வது செமி பைனலில் இங்கிலாந்தை எதிர்த்து டென்மார்க் மோதுகிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி, பைனலில் இத்தாலியுடன் மோதும். யூரோ கோப்பை கால்பந்து பைனல் வரும் 12ம் தேதி அதிகாலை 12.30 மணிக்கு, செமி பைனல் போட்டிகள் நடந்த அதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Related Stories:

More
>