×

Captain Cool, ஆசான் தோனி, ஒரு தலைமுறைக்கான வீரர்: இணையத்தை தெறிக்கவிடும் தோனி ரசிகர்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் 40-ஆவது பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். 1981ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி பிறந்த மகேந்திரசிங் தோனி, 1998ஆம் ஆண்டில் பீகார் மாநில U-19 அணியில் இடம் பிடித்தார். அடுத்து, 1999-ல் பீகார் அணிக்காக ரஞ்சிக் கோப்பையில் பங்கேற்றார். சிறப்பாக விளையாடி வந்த அவர், 2000ஆம் ஆண்டில் முதல்தரக் கிரிக்கெட் போட்டியில் முதல் சதம் அடித்து அசத்தினார். அதன்பிறகு, குடும்ப சூழ்நிலை காரணமாக, கிரிக்கெட்டை விட்டுவிட்டு இந்தியன் ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகர் பணிக்குச் சென்றார். 2001, 2002, 2003ஆம் ஆண்டுகளில் இப்பணியைத் தொடர்ந்த அவர், ரயில்வே அணியில் இடம்பெற்று கிரிக்கெட்டைத் தொடர்ந்தார்.

அவர் சிறப்பாக விளையாடியதால், 2004ஆம் ஆண்டு இந்திய அணியில் கிடைத்தது. 2005ஆம் ஆண்டு முதல் சர்வதேச சதத்தைப் பூர்த்தி செய்து, உலக அளவில் கவனம் பெற்றார். 2006ஆம் ஆண்டில் வளர்ச்சியில் உச்சத்தில் இருந்த தோனி, முதல் ஆயிரம் ரன்களை 53.95 சராசரி விகிதத்தில் கடந்து, அதிவிரைவாக 1000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். இவர் தொடர்ந்து அதிரடி காட்டியதால், 2007ஆம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். இவர் தலைமையில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி கோப்பை வென்று அசத்தியது.

டெஸ்ட்டிலும் தோனி தலைமையிலான இந்திய அணி தொடர் வெற்றி நடைபோட்டது. இதனால், 2009ஆம் ஆண்டில், டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதல்முறையாக முதலிடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்தது. 2010ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசியப் கோப்பையிலும் இந்திய அணி அபாரமாகச் செயல்பட்டு, 15 வருடங்களில் முதல்முறையாக இக்கோப்பையை வென்று அசத்தியது. இதனால், கேப்டன் தோனி உலக அளவில் தலைசிறந்த கேப்டனாக பார்க்கப்பட்டார். இதனால், 2013ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய அணிதான் தட்டித்தூக்கும் என பலர் கணித்தனர்.

அதேபோல்தான் நடந்தது. இறுதிப் போட்டியில் தோனி கடைசிவரை களத்தில் இருந்து சிக்ஸர் மூலம், இந்தியாவுக்கு உலகக் கோப்பையைப் பெற்றுக்கொடுத்தார். மேலும், 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஷிப் டிராபியையும் வென்று, மூன்றுவிதமான ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனி என்ற வரலாற்று சாதனையைப் படைத்தார். 2014ஆம் ஆண்டில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா, இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றிபெற்றது. அதற்குமுன் 27 வருடங்களாக லார்ட்ஸில் இந்தியா வெற்றிபெறாமல் இருந்தது.

இதுவும் தோனி கேப்டன்ஸியின் மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதிக்கு பின்பு தல தரிசனம் எப்போதும் கிடைக்கும் என கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாகி இருந்தனர். ஆனால் 2020 ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு ஆகஸ்ட் 15 ஆம் தேதி தன்னுடைய ஸ்டைலில், இன்ஸ்டாவில் தன்னுடைய ஓய்வை அறிவித்தார். ரசிகர்கள் கண்ணீர் மல்க அவருக்கு பிரியாவிடை கொடுத்தனர். ஆனாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் மஞ்சள் ஜெர்சி மூலம் ரசிகர்களுக்கு ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விருந்து படைத்து வருகிறார் தோனி.

தோனி தனியொரு வீரரை காட்டிலும் கேப்டன்சியில் அவர் மேற்கொண்ட சில தனித்துவ முடிவுகள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை. அவர் போட்டியின்போது மைதானத்தில் எடுத்த சில சாதுர்யமான முடிவுகள் இந்தியாவின் வெற்றியை சாத்தியமாக்கியது மட்டுமல்லாமல் பல நாடுகளையும் அடேங்கப்பா என ஆச்சரியப்படுத்தியது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இன்று தன்னுடைய 40-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். Captain Cool என புகழப்படும் தோனியின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக வாட்ஸ் அப், இன்ஸ்டா, டிவிட்டர், போன்ற சமூகவலைத்தளங்களில் தோனியின் புகைப்படத்தை பதிவிட்டு பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.


Tags : Captain Cool ,Asan Dhoni ,Dhoni , Captain Cool, Asan Dhoni, Player of a Generation: Dhoni fans to splash the internet!
× RELATED தோனியுடன் இணைந்து ஆட்டத்தை முடித்தது...