ஸ்ரீபெரும்புதூர் அருகே கள்ளத்தொடர்பால் பயங்கரம்; வாலிபர் கழுத்து அறுத்து படுகொலை: புடவையால் கட்டி கிணற்றில் உடல் வீச்சு: கணவன் உள்ளிட்ட 7 பேர் கும்பல் கைது

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே படப்பை ஊராட்சி, முருகாத்தம்மன்பேட்டை, டாக்டர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ராமு (33). இவர், கரசங்கால் சமத்துவபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ரேணுகா (31) என்ற மனைவி, ஒரு மகன், மகன் உள்ளனர். கடந்த 4ம் தேதி ராமு, தனது நண்பர்களுடன் வெளியே சென்றார். அதற்கு பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ரேணுகா, பல இடங்களில் தேடினார். எங்கு தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, மணிமங்கலம் போலீசில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரேணுகா புகார் செய்தார்.

அதில், ‘வஞ்சுவாஞ்சேரியை சேர்ந்த தினேஷ் உள்ளிட்ட 6 பேர் எனது கணவரை அழைத்து சென்றனர். அதற்கு பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவர்கள் மீதுதான் சந்தேகம் உள்ளது. விசாரித்து எனது கணவரை கண்டுபிடித்து தர வேண்டும்’ என்று கூறியிருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், பெரும்புதூர் அடுத்த படப்பை அருகே காவல்கழனி என்ற இடத்தில் ஒரு பாழடைந்த கிணறு உள்ளது. இவ்வழியாக சிலர் இன்று காலை நடந்து சென்றனர். அப்போது கடுமையான துர்நாற்றம் வீசியது. உடனே துர்நாற்றம் வீசிய திசை நோக்கி சென்று பார்த்தனர். பாழடைந்த கிணற்றில் அழுகிய நிலையில் சடலம் கிடந்தது தெரிந்தது.

அதிர்ச்சியடைந்தனர். உடனே மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, வாலிபரின் சடலத்தை கைப்பற்றினர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, வஞ்சுவாஞ்சேரியை சேர்ந்த தினேஷ் (21), வினோத் (20), பிரபாகரன் (22), சாலமங்கலத்தை சேர்ந்த பூவேந்திரன் (19), நரியம்பாக்கம் ஆகாஷ் (19), வெங்கம்பாக்கம் சின்னராசு (19) ஆகிய 6 பேரை இன்று காலை பிடித்து விசாரித்தனர். அவர்கள்தான் ராமுவை கழுத்து அறுத்து கொலை செய்து, உடலை கிணற்றில் வீசியது தெரிந்தது. விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நரியம்பாக்கத்தை சேர்ந்தவர் மணி (39). இவரது மனைவி மகாலட்சுமி (35). இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர். கடந்த 8 வருடமாக மகாலட்சுமிக்கும் ராமுவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இது, கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மணிக்கு தெரியவர மனைவியை கண்டித்துள்ளார். இதனால் அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இதையடுத்து இருவரும் பிரிந்து தனித்தனியாக வசிக்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ராமு அடிக்கடி சென்று, மகாலட்சுமியுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். அதே நேரத்தில், வஞ்சுவாஞ்சேரியை சேர்ந்த தினேஷுடனும் மகாலட்சுமிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

ராமுவும், தினேஷும் ஒருவருக்கு தெரியாமல் ஒருவர், அவ்வப்போது மகாலட்சுமியுடன் ‘ஜாலி’யாக இருந்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணியும், மகாலட்சமியும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றாக குடும்பம் நடத்த தொடங்கினர். இதனால் ராமுவும் தினேஷும் மகாலட்சுமியை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்தனர். இந்த நேரத்தில், மணியும், தினேஷும் நண்பர்கள் என்பதால் என்பதால், ராமுவை பற்றி பல்வேறு அவதூறு தகவல்களை தினேஷ் தெரிவித்து வந்துள்ளார். அவரை தீர்த்துக் கட்டும்படி மணி கூறியதாக தெரிகிறது. இதை பயன்படுத்தி கடந்த 4ம் தேதி ராமுவுக்கு தினேஷ் போன் செய்து, மது விருந்துக்கு அழைத்திருக்கிறார்.

அவரும் சென்றுள்ளார். அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அந்த நேரத்தில், போதை அதிகமானதும், மகாலட்சுமியுடனான கள்ளத்தொடர்பு குறித்து தினேஷ் கும்பலுக்கும் ராமுவுக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. வாக்குவாதம் முற்றியதில் தினேஷ், மணி உள்பட 7 பேர், ராமுவின் கழுத்தை கத்தியால் சரமாரியாக அறுத்துள்ளனர். பின்னர் அவரது கை, கால்களை ஒரு புடவையால் கட்டி, காவல்கழனியில் உள்ள பாழுங்கிணற்றில் கல்லை கட்டி போட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மணி, தினேஷ் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Related Stories: