மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முழு ஒத்துழைப்பையும் அரசு வழங்கும்!: ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்..!!

மதுரை: மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அனைத்து ஒத்துழைப்பையும் தமிழ்நாடு அரசு வழங்கும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மதுரையை சேர்ந்த புஷ்பவனம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். மனுவில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் கட்டுமான பணிகள் தொடங்குவதற்காக கடந்த 2018ம் ஆண்டு பிரதமர் மோடி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் எந்த பணியும் தொடங்கப்படவில்லை.

இந்த எய்ம்ஸ் மருத்துவமனையோடு இந்தியாவில் மற்ற மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கான கட்டமைப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு எம்.பி.பி.எஸ். பாடப்பிரிவிற்கான மாணவர் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. ஆனால் மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் எந்தவித கட்டுமான பணிகளும், மருத்துவ சேர்க்கையும் தற்போது வரை நடைபெறவில்லை. குறிப்பாக இந்த தொற்று காலத்தில் அங்கு வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு தொடங்கி மாணவர் சேர்க்கை நடத்தினால் நன்றாக இருக்கும் என்றும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே இந்த வழக்கு விசாரணையின் போது ஒன்றிய அரசின் சார்பாக அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தற்காலிக சிகிச்சை பிரிவை தொடங்குவதற்கு தயாராக உள்ளோம். மருத்துவ மாணவர் சேர்க்கையும் நடத்த நாங்கள் தயார். அதற்கான போதிய தற்காலிக கட்டமைப்புகளை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? இதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில் மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அனைத்து ஒத்துழைப்பையும் தமிழ்நாடு அரசு வழங்கும் என்று தமிழக அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார். அதில், தற்காலிக மாணவர் சேர்க்கை, வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு தொடங்குவது குறித்து ஜூலை 16ல் ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த அறிக்கையை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் தமிழக அரசின் செயல் வடிவம் குறித்து அடுத்த விசாரணையின் போது அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.

Related Stories:

>