×

புது முகங்கள் உட்பட 43 ஒன்றிய அமைச்சர்கள் இன்று மாலை பதவியேற்க உள்ள நிலையில், 6 ஒன்றிய அமைச்சர்கள் பதவி விலகல்

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு 2வது முறையாக பதவியேற்றப் பிறகு முதல் முறையாக, இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு 43 ஒன்றிய அமைச்சர்கள் இன்று மாலை பதவியேற்கின்றனர். மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தொடர்ந்து 2வது முறையாக கடந்த 2019ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. அதிலிருந்து கடந்த 2 ஆண்டுகளாக ஒன்றிய அமைச்சரவையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சில கூட்டணி கட்சிகள் விலகியதாலும், அமைச்சர்கள் காலமானதாலும் சில இடங்கள் காலியாகின. அந்த துறைகளையும் கூடுதல் பொறுப்பாக தற்போதுள்ள அமைச்சர்களே கவனித்து வருவதால் சிலருக்கு பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.

எனவே, அடுத்த ஆண்டு உபி உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நடக்க உள்ளதை ஒட்டியும், அரசு நிர்வாகத்திறனை மேம்படுத்தும் வகையிலும், ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அதன்படி இன்று மாலை புதிய அமைச்சரவையில் 43 ஒன்றிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர். புதிதாக பதவி ஏற்க உள்ள அமைச்சர்களில் 12 பேர் பட்டியல் வகுப்பினர், 8 பேர் பழங்குடியினர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கத்தில் பாஜக கூட்டணி கட்சிகளுக்கும் இடம் அளிக்கப்படுகிறது. புதிய அமைச்சரவை பதவி ஏற்க உள்ள நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்,  மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார், மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் , குழந்தை - பெண்கள் நலத்துறை அமைச்சர் தபஸ்ரீ சவுத்ரி, மத்திய ரசாயனத்துறை அமைச்சர் சதானந்த கவுடா  ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். மத்திய அமைச்சர்கள் சஞ்சய் தாத்ரே , ராவ் சாகேப் ஆகியோரும் பதவி விலகி உள்ளனர்.

இதனிடையே ஒன்றிய அமைச்சர்களாக புதிதாக பதவி ஏற்க உள்ளவர்கள் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தனர். சர்பானந்த சோனோவால், ஜோதிராதித்ய சிந்தியா, நாராயண் ரானே உள்ளிட்டோர் மோடியை சந்தித்து பேசினர். அண்மையில் லோக் ஜனசத்தி கட்சியின் தலைவராக பசுபதி குமார் பராசுக்கும் பதவி வழங்கப்படுகிறது.

Tags : Union , பிரதமர் மோடி
× RELATED அமெரிக்கா-ஈரான் நாடுகளில் பிடித்து...