×

கொல்லிமலையில் பலத்த மழை எதிரொலி ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

*சுற்றுலா பயணிகள் வருகை குறைவு

சேந்தமங்கலம் :  கொல்லிமலையில் பலத்த மழை எதிரொலியால் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்ட நிலையில் குறைந்த அளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். நாமக்கல் மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருவது கொல்லிமலை. அடிவாரம் காரவள்ளியில் இருந்து 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்லவேண்டும். கொல்லிமலையில் பிரசித்தி பெற்ற அரப்பளீஸ்வரர் கோயில் எதிரே ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, சினி பால்ஸ், மாசிலா அருவி, நம்ம அருவி, எட்டுகை அம்மன் கோயில் காட்சி முனையம், தாவரவியல் பூங்கா வாசலூர்பட்டி படகு இல்லம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் ஏராளமாக உள்ளது.

கொல்லிமலைக்கு தமிழகம் மட்டுமில்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, சுற்றுலா தலங்கள் மூடப்பட்டது. தற்போது நோய்த்தொற்று குறையத்தொடங்கியுள்ளதால் பொழுதுபோக்கு மையங்களை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் முதல் கொல்லிமலைக்கு அதிக சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்ப்பார்ப்பு நிலவியது.

 இருந்தபோதிலும் எதிர்பார்த்த அளவு சுற்றுலாப்பயணிகள் வரவில்லை. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு கொல்லிமலையில் பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்ம அருவி, ஆகியவற்றில் தண்ணீர் அதிகளவு கொட்டுகிறது. அருவிகளில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இங்குள்ள பொழுதுபோக்கு மையங்கள் சுற்றுலா பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.மேலும் வெளியூர் சுற்றுலாப் பயணிகளை நம்பி அப்பகுதிகளில் பழக்கடைகள், மளிகை கடைகள், உணவகங்கள், தங்கும் விடுதிகளில் வியாபாரம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ஆனாலும் வரும் நாட்களில் ஆடிப்பண்டிகை அன்று சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என வியாபாரிகள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். 


Tags : Kolli Hills , Kollimalai, agayagangai Falls,Tourist
× RELATED கொல்லிமலை அருவிகளில் வெள்ளம்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்