×

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் திருச்சியை சேர்ந்த 3 தடகள நட்சத்திரங்கள்

திருச்சி :  ஜப்பானின் டோக்கியோ நகரில் வரும் 23ம் தேதி ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ளது. இதில் பங்கேற்கும் இந்திய தடகள அணியில் இடம் பெற்றுவர்களின் விவரங்களை இந்திய தடகள சம்மேளனம் அறிவித்து உள்ளது. அதில் தமிழகத்தை 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர், ஆரோக்கிய ராஜீவ் ஆகிய மூவரும் திருச்சியை சேர்ந்தவர்கள் ஆகும். இவர்கள் தொடர்பான விவரம் பின்வருமாறு:

சென்ட்ரிங் காண்ட்ராக்டரின் மகள்:

திருவெறும்பூர் பகவதிபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் இவர் சென்ட்ரிங் காண்ட்ராக்ட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பூங்கொடி இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூன்றாவது மகளான சுபா (22). பள்ளிக் காலம் முதலே சுபா, தடகள போட்டியில் சிறந்து விளங்கி உள்ளார். இந்நிலையில் அவருக்கு விளையாட்டு ஆசிரியராக இருந்த கனகராஜ் அவரை ஊக்குவித்ததோடு பயிற்சிகளையும் வழங்கினார். மேலும் விளையாட்டு கல்வி ஆசிரியர் இந்திரா, அவருக்கு விளையாட்டு பயிற்சி பெரிய அளவில் கொடுத்துள்ளார்.

தற்போது கர்நாடக மாநிலத்தில் பிபிஏ இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள இந்தியன் விளையாட்டு பயிற்சி மையத்தில் கடந்த 5 வருடங்களாக அங்கு பயிற்சி பெற்று வருகிறார். பாட்டியாலாவில் உள்ள இந்தியன் விளையாட்டு பயிற்சி மையத்தில் ஹெலினா என்பவரின் பயிற்சியின் கீழ் 20 தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள், 8 சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு 3 பதக்கங்களை பெற்றுள்ளார்.

கடந்த வாரம் ஒலிம்பிக் போட்டிக்கான தேர்வு விளையாட்டு தகுதி போட்டி வெற்றி பெற்றதை தொடர்ந்து ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்கு தேர்வாகி உள்ளதாகவும் தனக்கு அரசு வேலை கிடைப்பதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும் சுபாவும் அவரது தாய் பூங்கொடியும் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளனர்.

திருவெறும்பூர் பகுதியில் இருந்து ஒரு பெண் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளது திருவெறும்பூருக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே பெருமை என்றும் அவர் இந்தியாவிற்காக ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று பெருமை சேர்க்க வேண்டுமென்றும் திருவெறும்பூர் பகுதி மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வறுமையும் போராட்டமும்:

திருச்சி மாவட்டம் குண்டூர் பகுதியை சேர்ந்த சேகர்-உஷா தம்பதியரின் மகள் தனலெட்சுமி (22). தடகள வீராங்கனையான இவர், பல்வேறு தேசிய தடகள போட்டிகளில் பங்கேற்று தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். கடந்த மார்ச் மாதம் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடந்த தேசிய தடகள போட்டியில் பங்கேற்ற தனலெட்சுமி தங்கப்பதக்கத்தை வென்று திருச்சி திரும்பினார். அவருக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தனலட்சுமி, தற்போது பெங்களூருவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். தந்தை சேகர் இறந்து விட்டார். இவரது தாய் உஷா மிகுந்த சிரமங்களுக்கு இடையில் வறுமையோடு போராடி தோட்ட வேலை செய்து தனது 3வது மகளான தனலட்சுமியை சாதனையாளர் ஆக்கியுள்ளார். இதுகுறித்து தனலட்சுமி கூறுகையில், கொரோனா பரவல் மத்தியில், பொது முடக்கத்தில் மிகுந்த சிரமங்களுக்கு இடையே பயிற்சி பெற்றேன். நிச்சயம் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன் என்றார்.

 டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்ட போட்டிக்கு இவர் தேர்வாகி உள்ளார். இதையடுத்து தனலெட்சுமிக்கு அவரது தாய் உஷா, பயிற்சியாளர் மணிகண்ட ஆறுமுகம், மாற்றம் அமைப்பின் நிர்வாகி தாமஸ் மற்றும் விளையாட்டு வீரர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


ரியோவில் விட்டதை டோக்கியோவில் பிடிப்பேன்:

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள வழுதியூர் கிராமத்தை சேர்ந்தவர் சௌந்தரராஜன் - லில்லி சந்திரா தம்பதியரின் மூத்த மகன் ஆரோக்கியராஜிவ் (30). ராணுவ பணியில் இருந்து வருகிறார். திருமணமான இவருக்கு அனுஷியா என்ற மனைவியும், அதினா என்ற பெண் குழந்தையும் உள்ளது. ஆரோக்கியராஜிவ் தனது தொடக்கக் கல்வியை தனது சொந்த கிராமமான வழுதியூர் தொடக்கப் பள்ளியிலும், மேல்நிலை கல்வியை லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியிலும் முடித்துள்ளார்.

தடகள ஓட்டப்பந்தயத்தில் உள்ள ஆர்வத்தில் தனது ஓய்வு நேரத்தில் முழுவதையுமே லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிஏ வரலாறு பாடபிரிவில் சேர்ந்த இவர், அங்கு படித்தபோது பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் கல்லூரிகளுக்கு இடையே நடந்த தடகள போட்டியில் அவர் கலந்து கொண்டு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

இவருக்கு ஊட்டியில் உள்ள வெலிங்டனில் ராணுவ எம்ஆர்சி இல் சிப்பாய் வேலை கிடைத்ததால் கல்லூரிப் படிப்பை பாதியிலேயே விட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இருப்பினும் இவர் பணியில் இருந்துகொண்டே தாய்லாந்து, இலங்கை, சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் நடந்த சர்வதேச போட்டிகளில் இந்தியா சார்பில் தடகள போட்டியில் கலந்துகொண்டு 3 தங்க பதக்கத்தை வென்றுள்ளார்.

இதனால் இந்திய ராணுவம் ஆரோக்கியராஜிக்கு, ஹவில்தாராக பதவி உயர்வு வழங்கி கௌரவித்தது. ஆரோக்கியராஜிவ் தம்பி தற்போது ராணுவத்தில் வேலை கிடைத்து பயிற்சியில் உள்ளார். இந்தோனேஷியா ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் கலப்பு மற்றும் ஆடவர் தொடர் ஓட்டப் போட்டியில் இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்று பெருமை சேர்த்துள்ளார். இவருக்கு மத்திய அரசு சார்பில் அர்ஜுனா விருது குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள உள்ள ஆரோக்கியராஜிவ் கூறுகையில், இந்த ஆண்டில் கொரோனா தொற்றால் விளையாட்டு பயிற்சி மைதானங்கள் திறக்க வில்லை இதனால் பயிற்சி எடுக்க முடியவில்லை இருந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பயிற்சி பெற்று தயாராகி உள்ளேன்.

இரண்டாவது முறையாக ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது இதனை பயன்படுத்தி தங்கம் வென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் எனது சொந்த ஊருக்கும் பெருமை சேர்ப்பதே எனது லட்சியம் என கூறினார்.

Tags : Tokyo Olympic Games , Tokya olymoics, Trichy, Athlete stars
× RELATED டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: ஆடவர்...