ஸ்டேன் சுவாமி மரணத்திற்கு பிறகு திடீர் திருப்பம் : பீமா கோரேகான் வழக்கில் கைதான வழக்கறிஞரின் கணினியை ஹேக் செய்தது அம்பலம்!!

மும்பை : மாவோயிஸ்ட்களுடன் தொடர்பில் இருந்ததாக ஸ்டேன் சுவாமி போலவே கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங்கின் கணினியை ஹேக் செய்து பொய்யான ஆவணங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதை அமெரிக்க தடவியல் நிறுவனம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. தீவிரவாத சதி செயல்களில் ஈடுபட்டதற்கு அவரது கம்ப்யூட்டரில் ஆதாரம் இருப்பதாக கடந்த 2018ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி சுரேந்திரா கைது செய்யப்பட்டார். ஆனால் அவரை கைது செய்வதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் சுரேந்திராவின் கணினி ஹேக் செய்யப்பட்டு இருப்பது அமெரிக்க நிறுவனமான பாஸ்டனில் உள்ள ஆர்சனல் கன்சல்டிங் ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஹேக்கிங் தாக்குதல் நடத்தியவர் சுரேந்திராவின் கணினியை மின்னஞ்சல் வழியாக ஹேக் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு பிப்ரவரி 29ம் தேதி ஹேக்கர் அனுப்பிய லிங்கை கிளிக் செய்துள்ளார். அப்போது சில ஆவணங்கள் கணினியில் பதிவிறக்கம் ஆகி இருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. சுரேந்திராவின் கணினி மட்டுமல்லாமல் பீமா கோரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பலரது மின்னஞ்சல் கணக்குகளும் ஹேக் செய்யப்பட்டு இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பீமா கோரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்டேன் சுவாமி, சுரேந்திரா உள்ளிட்ட 16 பேர் மீதான புகாரில் முக்கிய ஆதாரமாக விளங்குவது அவர்களின் கணினியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஆவணங்கள் தான்.தற்போது இந்த கணினிகள் ஹேக் செய்யப்பட்டதாக அமெரிக்க நிறுவனம் கூறுகிறது.இதனால் கணினிகளில் மர்ம நபர்கள் தவறான ஆவணங்களை பதிவிறக்கம் செய்து வழக்கில் சிக்கவைத்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Related Stories:

More