பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் பால் சந்திரமோகன், பேராசிரியை நளினி சுந்தரி மீது வழக்குப்பதிவு

திருச்சி: பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் பால் சந்திரமோகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரை அடுத்து ஸ்ரீரங்கம் மகளிர் போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. மாவட்ட சமூக நல அலுவலர் புகாரின் பேரில் பால் சந்திரமோகன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியை நளினி சுந்தரி மீதும் ஸ்ரீரங்கம் மகளிர் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருச்சியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றி வந்தவர் பேராசிரியர் பால் சந்திரமோகன். அவரிடம் படிக்கும் முதலாமாண்டு படிக்கும் கல்லூரி மாணவிகள் ஐந்து பேர் பாலியல் புகார் தெரிவித்தனர். மேலும் அவர் நடந்து கொள்ளும் முறை குறித்து ஐந்து பக்கத்திற்குக் கல்லூரி முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தனர். அந்தக் கடிதத்தில், பால் சந்திரமோகன் சார் ரொம்ப மோசமான முறையில் நடந்துகொள்வார். நாங்கள் வகுப்பறையில் உட்கார்ந்திருந்தால் எங்களை உரசிக்கொண்டே நடந்து போவார். எங்கள் அருகே மிக நெருக்கமாக வந்து அமர்ந்துகொள்வார். இரட்டை அர்த்தத்தில் பேசும் படி சொல்வார் என பல குற்றச்சாட்டுகளை அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அந்தக் கடிதத்தில், அதே தமிழ்த் துறையில் பணிபுரியும் பெண் உதவிப் பேராசிரியை மாணவிகளைப் பார்த்து, பால் சாரை பார்க்கப் போகையில் முகம் கழுவி மேக்கப் போட்டுக்கொண்டு தான் போகவேண்டும் என்று வற்புறுத்துவார் எனக் குறிப்பிட்டிருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணைக் குழு உறுப்பினர்களான வக்கீல் ஜெயந்தி ராணி, தலைமையிலான குழுவினர், தமிழ்த்துறைத் தலைவர் பால் சந்திரமோகன், உதவி பேராசிரியர் நளினி உள்ளிட்டோரிடம் விசாரணை செய்து அதன் அறிக்கையை, கல்லூரி முதல்வரிடம் தாக்கல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து பால் சந்திரசேகரைக் கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. மேலும், இதுபோல் சம்பவங்கள் தொடர்ந்து நடக்காமல் இருக்க ஒரு குழுவையும் நியமிக்கிறோம் எனத் தெரிவித்துள்ளது கல்லூரி நிர்வாகம். இந்நிலையில் பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் பால் சந்திரமோகன், பேராசிரியை நளினி சுந்தரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

More
>