×

கூடலூர் அருகே சாலையில் பிளிறியபடி ஓடிய காட்டு யானை: அதிர்ஷ்டவசமாக தப்பிய நபர்- வீடியோ வைரல்

ஊட்டி: கூடலூர் அருகே சாலையில் சென்ற காட்டு யானை, ஒருவரை வேகமாக துரத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் நடுவே, மைசூர் - கூடலூர் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இச்சாலையை ஒட்டி தொரப்பள்ளி கிராமம் உள்ளது. உணவு, தண்ணீர் மற்றும் இனப்பெருக்கத்திற்காக யானைகள் அடிக்கடி இப்பகுதி வழியாக இடம்பெயர்ந்து செல்வது வழக்கம். இதனால் இப்பகுதி யானைகளின் முக்கிய வழித்தடமாக உள்ளது. சமீபகாலமாக, இப்பகுதியில் கட்டுமான பணிகளும், விவசாய பரப்பும் அதிகரித்து வருகிறது. விவசாய பயிர்களை காட்டு யானைகள் சேதப்படுத்துவதை தவிர்க்கும் பொருட்டு தொரப்பள்ளியில் பெரிய அகழிகள் வெட்டப்பட்டுள்ளன.

இந்த சூழலில் முதுமலையில் இருந்து அடிக்கடி வெளியே வரும் காட்டு யானை ஒன்று தொரப்பள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து அங்குள்ள சோதனைச்சாவடிக்கு அருகில் வனப்பகுதிக்குள் செல்வது வழக்கம். நேற்று முன்தினம் வழக்கம்போல் பகல் நேரத்தில் வனத்தில் இருந்து வெளியேறிய அந்த காட்டு யானை, சாலையில் நடந்து வந்தது.  அப்போது யானையை பார்த்த ஒருவர், சாலையின் குறுக்கே ஓடினார். இதை தொலைவில் இருந்து பார்த்த யானை, அவரை வேகமாக விரட்டியது. அதற்குள் அவர் எதிர்புறம் ஓடி பாதுகாப்பான இடத்திற்கு சென்றார். அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் சத்தம் எழுப்பவே யானை பிளிறியபடியே சாலையில் ஓடியது. இதனை பலரும் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : Kudalur , Cuddalore, road, wild elephant, video
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...