×

இந்தியாவில் தாக்குதல் நடத்த டிேரான் படை உருவாக்கும் பாகிஸ்தான்: சீனா, துருக்கியிடம் தீவிர பேச்சு

புதுடெல்லி: லடாக் எல்லையில் இந்தியா - சீனா இடையே போர் பதற்றம் தணியாத நிலையில், தனது ராணுவத்தில் டிரோன் படையை உருவாக்கும் முயற்சியில் பாகிஸ்தான் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.  இந்தியா - சீனா இடையே கடந்தாண்டு முதல் லடாக் எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இருதரப்பும் படைகளை  குவித்துள்ளன. போர் ஏற்படுவதை  தடுக்க, இருநாட்டு ராணுவமும் இதுவரையில் பல கட்ட பேச்சுவார்த்தையை நடத்திய போதிலும், படைகள் வாபஸ் பற்றி இன்னும் உறுதியான முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில், நாட்டில் முதல் முறையாக கடந்த மாதம் 27ம் தேதி ஜம்மு விமானப்படை தளத்தின் மீது தீவிரவாதிகள் டிரோன் மூலம் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த நாட்களில் ஜம்மு காஷ்மீரில் டிரோன்கள் பறந்து பீதியை கிளப்பின.

அதேபோல்,  பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீதும் டிரோன் பறந்தது பதற்றத்தை அதிகரித்தது. இந்நிலையில், இந்தியா - சீனா இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவம் டிரோன் படையை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தற்போது அதிர்ச்சி  தகவல் வெளியாகி இருக்கிறது. இது, இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த புதிய படைப்பிரிவுக்காக துருக்கி, சீனாவிடம் இருந்து அதிநவீன டிரோன்கள் மற்றும் டிரோன் தாக்குதல் தடுப்பு சாதனங்களை பாகிஸ்தான் வாங்குகிறது. இதற்கான பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெறுகிறது.

கடந்த மே 21ம் தேதியும், ஜூன் 11ம் தேதியும் பாகிஸ்தான் ராணுவம், உளவுத்துறை ஆகியவை அடங்கிய உயர்நிலை குழு துருக்கி சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. எஸ்-250 என்ற டிரோன் தற்போது ராணுவ பயன்பாட்டில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதை அதிகளவில் வாங்க, பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.  மேலும், சீனாவிடம் இருந்து ‘நொரின்கோ’ என்ற டிரோன் தடுப்பு சாதனங்களை வாங்குகிறது. மேலும், ஜெர்மனியிடம் இருந்த ‘ஏ‘ அர்டோஸ் என்ற டிரோன், அது சார்ந்த சாதனங்களை ஏற்கனவே வாங்கியுள்ளது.


ஜம்மு காஷ்மீர் முழுவதும் டிரோன் தடுப்பு சாதனம்
ஜம்மு விமானப்படை தளத்தின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் முழுவதும் முக்கிய ராணுவ தளங்களில் டிரோன் தாக்குதல் தடுப்பு சாதனங்களை நிறுவ, ராணுவம் முடிவு செய்துள்ளது. இதற்காக, உடனடியாக 10 சாதனங்கள் வாங்கப்பட உள்ளது.

ஏவுகணை சோதனை
டிரோனில் இருந்து ‘பார்க்’ என்ற ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தும் சோதனையை கடந்த மாதம் 24ம் தேதி நடத்த பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டு இருந்தது.  இந்த சிறிய ரக ஏவுகணை, லேசர் வழிகாட்டுதல் மூலம் இலக்குகளை துல்லியமாக தாக்கு  திறன் படைத்தது. ஆனால், கடைசி நேரத்தில் இந்த சோதனை ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Tags : Déran Force ,India ,China ,Turkey , India, Tyrone Force, Pakistan: China, Turkey
× RELATED மீண்டும் சீண்டும் சீனா மோடியின் சீனா...