×

பெரம்பூர் ஐசிஎப் மாஜி அதிகாரி கைது விவகாரம் ரூ.5.89 கோடி லஞ்சத்தை வாங்கி கொடுத்த பெண் தொழிலதிபர்: சிபிஐயின் கிடுக்குபிடி விசாரணையில் அம்பலம்

சென்னை: பெரம்பூர் ஐசிஎப் முன்னாள் அதிகாரியை சிபிஐ கைது செய்துள்ள நிலையில், அவருக்கு ரூ.5.89 கோடி ரொக்கத்தை லஞ்சமாக வசூல் செய்து கொடுத்தது சென்னையை சேர்ந்த பெண் தொழிலதிபர் என்பது தெரியவந்துள்ளது. சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பயிற்சியாளர் தொழிற்சாலையின் (ஐ.சி.எஃப்) இந்திய ரயில்வே மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (ஐ.ஆர்.எஸ்.எம்.இ) அதிகாரியாக  ஏ.கே.கத்பால் பணியாற்றினார். இவர், கடந்த 2019 பிப்ரவரி முதல் 2021 மார்ச் 31 (ஓய்வுபெற்ற நாள்) வரையிலான காலகட்டத்தில் ரயில்வே பணிகளுக்கான ஒப்பந்தத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. அதையடுத்து, அவரை சிபிஐ டெல்லியில் கைது செய்தது.

இதுகுறித்து சிபிஐ செய்தித் தொடர்பாளர் ஜோஷி கூறுகையில், ‘பெரம்பூரில் ஐ.சி.எஃப்பில் முதன்மை தலைமை இயந்திர பொறியாளராக ஏ.கே.கத்பால் நியமிக்கப்பட்டபோது, யுனிவர்சல் இன்ஜினியர்ஸ் சென்னை பிரைவேட் லிமிடெட் பெண் இயக்குனர் ஹம்ஸா வேணுகோபாலன் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் சிலருடன் இணைந்து ரயில்வே பணிகளை டெண்டர் விடுதல் மற்றும் அதனை நிறைவேற்றுவதில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் வந்தது.

அதனால், குற்றம் சாட்டப்பட்ட ஏ.கே.கத்பால், கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி முதல் கடந்த மார்ச் 31 (ஓய்வுபெற்ற நாள்) வரையிலான காலகட்டத்தில் குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் பிறரிடமிருந்து லஞ்சம் வாங்கிய புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. டெல்லி, சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஏ.கே.கத்பாலின் வீடுகளில் சோதனை நடத்திய போது, கணக்கில் வராத 23 கிலோ தங்கம் மீட்கப்பட்டது. கத்பாலின் சகோதரர் சஞ்சயின் வீடு உட்பட ஒன்பது இடங்களில் சிபிஐ தேடுதல் வேட்டை நடத்தியது. அங்கிருந்து ரூ.2.75 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஏ.கே.கத்பால் சென்னையில் பணியாற்றிய இரண்டாண்டில் ஹம்ஸா வேணுகோபால் மூலமாக ரூ.5.89 கோடி லஞ்சப் பணத்தை பெற்றுள்ளார். ஹம்சா வேணுகோபால் லஞ்சப் பணத்தை பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து வசூல் செய்து கொடுத்துள்ளார். இவர், பல நிறுவனங்களின் புரோக்கராக கத்பாலுக்காக செயல்பட்டுள்ளார். சில நிறுவனங்களின் தொடர் புகாரையடுத்து, கத்பாலை தொடர்ந்து சிபிஐ கண்காணித்து வந்துள்ளது. இவ்வாறாக லஞ்சத் தொகையின் இரண்டாவது தவணையான ரூ.50 லட்சத்தை கத்பாலிடம் ஹம்சா வேணுகோபால் கொடுக்க சென்றபோது சிபிஐயின் பிடியில் சிக்கினர். தொடர் விசாரணைக்கு பின்னர், நேற்று முன்தினம் டெல்லியில் கத்பால் கைது செய்யப்பட்டார். அவருடன் சேர்ந்து மேலும் 4 பேரை கைது செய்து விசாரித்து வருகிறோம்’ என்று தெரிவித்தார்.

Tags : Perambur ,CBI ,ICF , Perambur ICF ex-officer arrested for bribery of Rs 5.89 crore
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது