×

யூரோ கோப்பை பைனலுக்கு முதல்முறையாக முன்னேறுமா இங்கிலாந்து?...டென்மார்க்குடன் இன்று பலப்பரீட்சை

லண்டன்: யூரோ கோப்பை கால்பந்து தொடரில்  இங்கிலாந்து அணி முதல்முறையாக பைனலுக்கு முன்னேறும் முனைப்புடன்  இன்று டென்மார்க்கை எதிர்கொள்கிறது. யூரோ கால்பந்து தொடரின் பிரதான சுற்றில் 10வது முறையாக விளையாடும் இங்கிலாந்து, 2வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அதுவும் 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வாய்ப்பு இங்கிலாந்துக்கு கிடைத்துள்ளது. இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கும் 2வது அரையிறுதி ஆட்டத்தில்  டென்மார்க்கை எதிர்கொள்கிறது இங்கிலாந்து.

முன்னாள் சாம்பியனான (1992) டென்மார்க் அணிக்கு இது 4வது அரையிறுதி வாய்ப்பு.  இன்றைய ஆட்டத்தில் வென்றால் 2வது முறையாக இறுதி ஆட்டத்துக்கு டென்மார்க் முன்னேறும். லீக் சுற்றில் பி பிரிவில் இடம் பெற்றிருந்த டென்மார்க் ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் 2வது இடம் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. ரவுண்ட் ஆப் 16ல் வேல்ஸ், காலிறுதியில் செக் குடியரசு அணிகளை நொறுக்கித் தள்ளி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. அதானால்  கேப்டன் சைமன் கஜெர் தலைமையிலான டென்மார்க் அணியில் மார்டின் பிரைத்வைட், கிறிஸ்டியன் டோல்பெர்க், ஜோசின் ஆண்டர்சன்,  ஜோகிம் மெக்லே, ஜானிக் வெஸ்ட்கார்ட்,  கோல்கீப்பர்  கஸ்பர் ஷிபமாய்கேல்  என பலரும்  அரையிறுதியில் கலக்க காத்திருக்கின்றனர்.

முன்னாள் சாம்பியனை எதிர்கொள்ளும் இங்கிலாந்தையும் குறைத்து மதிப்பிட முடியாது.  பெக்காம், ரூனியை தொடர்ந்து இங்கிலாந்தின் நட்சத்திர வீரராக ஹாரி கேன் மாறியுள்ளார். அவர் மட்டுமல்ல அவரது தலைமையிலான இங்கிலாந்து அணியில் உள்ள ரகீம் ஸ்டெர்லிங், ஹாரி மகீர்,  ஜோர்டன் ஹெண்டர்சன், லூக் ஷா, கோல் கீப்பர் ஜோர்டன் பிக்போர்டு ஆகியோரும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.அது அரையிறுதி ஆட்டத்திலும் தொடர்ந்தால் இங்கிலாந்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைக்கும்.  இல்லாவிட்டால் முன்னாள் சாம்பியன் டென்மார்க் 2வது முறையாக இறுதி ஆட்டத்தில் விளையாடும்.

யூரோ களத்தில்...
யூரோ கோப்பை தொடர்களில் 5 ஆட்டங்களில் இரு அணிகளும் மோதியுள்ளதில்  இங்கிலாந்து 2 ஆட்டங்களிலும்,   டென்மார்க் ஒரு ஆட்டத்திலும் வென்றுள்ளன. 2 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன.

கடைசியாக...
இங்கிலாந்து அணி கடைசியாக மோதிய 6 சர்வதேச ஆட்டங்களில் ஒன்றில் கூட தோற்கவில்லை. அந்த ஆட்டங்களிலும் 5 நாடுகளை வென்றதுடன், ஒரு நாட்டுடன் டிரா செய்துள்ளது. அதே நேரத்தில் டென்மார்க் கடைசியாக விளையாடிய 6 சர்வதேச ஆட்டங்களில் 4 நாடுகளை வீழ்த்தியுள்ளது. 2 நாடுகளிடம் தோல்வியை சந்தித்துள்ளது.

நேருக்கு நேர்...
இங்கிலாந்து - டென்மார்க் அணிகள் 1948 முதல் 2020 வரை 21 சர்வதேச ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அவற்றில் இங்கிலாந்து 12 ஆட்டங்களிலும், டென்மார்க் 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. எஞ்சிய 5ஆட்டங்கள் டிரா ஆகியுள்ளன.

Tags : England ,Euro Cup , Euro Cup, Final, England, Denmark, Multi-Test
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை