×

கோபா கோப்பை கால்பந்து: 21வது முறையாக பைனலில் பிரேசில்

ரியோ டி ஜெனீரோ: கோபா அமெரிக்கா கோப்பை கால்பந்து தொடரில், நடப்பு சாம்பியன்  பிரேசில்  21வது முறையாக  இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. கோபா அமெரிக்கா கோப்பை கால்பந்து தொடரின் முதல்  அரையிறுதிப்போட்டி  நேற்று காலை நடந்தது.  ரியோ டி ஜெனீரோ நகரில் நடந்த இந்த ஆட்டத்தில்  பிரேசில்-பெரு அணிகள் மோதின. நடப்பு சாம்பியானான பிரேசிலிடம் முந்தைய தொடரின் இறுதிப்போட்டியில் தோற்றதற்கு பழிவாங்கும் முனைப்புடன் பெரு களம் கண்டது. எனினும், பிரேசில் அணியே வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புக்கு ஏற்ப, அந்த அணியின் ஆட்டமும் நல்ல உத்வேகத்துடன்  இருந்தது.  ஆனால், பெரு அணி கோல் கீப்பர் துடிப்புடன் செயல்பட்டு ஒவ்வொரு ஷாட்டையும் தடுத்தது, பிரேசில் அணிக்கு நெருக்கடியை கொடுத்தது.

பந்தை கடத்திச் செல்வதிலும், கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் சிறப்பாக செயல்பட்ட பிரேசில் அணிக்கு, கேப்டன் நெய்மர் ஆட்டத்தின் 35வது நிமிடத்தில்  அற்புதமாக கொடுத்த பாஸை லூகாஸ் மின்னல் வேகத்தில் கோலாக்கினார். அதன்பிறகு யாரும் கோலடிக்காததால் அதுவே வெற்றிக் கோலாக மாறியது.  தொடர்ந்து 2வது முறையாகவும், மொத்தத்தில் 3வது முறையாகவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை பெரு இழந்ததது. அதே சமயம், இந்த வெற்றியின் மூலம் பிரேசில் 21வது முறையாக  இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஏற்கனவே தான் விளையாடிய 20 இறுதிப்போட்டிகளில் 9 முறை பிரேசில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அர்ஜென்டீனா - கொலம்பியா இடையிலான 2வது அரையிறுதியில் வெற்றி பெற்ற அணியுடன் இறுதிப்போட்டியில் பிரேசில் விளையாடும். கோபா அமெரிக்கா சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் அந்த போட்டி இந்திய நேரப்படி ஜூலை 11ம் தேதி அதிகாலை 5.30க்கு தொடங்கி நடைபெற உள்ளது.

Tags : Copa del Rey ,Brazil , Copa Cup, football, Final, Brazil
× RELATED பிரேசிலில் கோர விபத்து: விமானம்...