×

மகளிர் ஒருநாள் தரவரிசை: 8வது முறையாக மித்தாலி நம்பர்1

துபாய்: மகளிர் கிரிக்கெட் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசையில், இந்திய அணி கேப்டன் மித்தாலி ராஜ் 8வது முறையாக முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். இங்கிலாந்துடன் சமீபத்தில் நடந்த ஒருநாள் போட்டித் தொடரில் அபாரமாக விளையாடிய மித்தாலி 3 போட்டிகளில் முறையே 72 ரன், 59 ரன், 75* ரன் என மொத்தம் 206 ரன் குவித்து (சராசரி 103.00, அரை சதம் 3) அசத்தினார். இதையடுத்து, ஐசிசி நேற்று வெளியிட்ட தரவரிசையில் அவர் 4 இடங்கள் முன்னேறி 8வது முறையாக நம்பர் 1 அந்தஸ்தை கைப்பற்றியுள்ளார்.

2005 ஏப்ரலில் மகளிர் ஒருநாள் உலக கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக 91* ரன் விளாசியதை அடுத்து, மித்தாலி முதல் முறையாக முதலிடத்துக்கு முன்னேறி இருந்தார். அதன் பிறகு வெவ்வேறு காலகட்டத்தில் நம்பர் 1 அந்தஸ்தை வகித்த அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த 22 ஆண்டுகளாக மித்தாலி சர்வதேச கிரிக்கெட்டில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மித்தாலி (762 புள்ளி), லிஸல் லீ (758, தெ.ஆப்.), அலிஸா ஹீலி (756, ஆஸி.), டாமி பியூமான்ட் (754, இங்கி.), ஸ்டெபானி டெய்லர் (746, வெ.இண்டீஸ்) ஆகியோர் டாப் 5 இடங்களில் உள்ளனர். இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 701 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளார்.


Tags : Mithali , Women, Ranking, Mithali
× RELATED இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒன்டே...