×

ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதா 2021 மாநில அரசின் அதிகாரத்தை பறிப்பதால் ரத்து செய்ய வேண்டும்: ஒன்றிய அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘‘ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதா 2021’’ மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் என்பதால் அதை திரும்பப் பெற வலியுறுத்தி ஒன்றிய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோருக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நாட்டில் கடந்த 1952ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒளிப்பதிவு சட்டத்தில் சில முக்கிய திருத்தங்களை செய்து தற்போதுள்ள ஒன்றிய அரசு, ‘ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதா 2021’ என வெளியிட்டது. இந்த வரைவுச் சட்டத்தில் உள்ள  திருத்தங்கள் சென்சார் போர்டு மற்றும் மாநில அரசுகளின் அதிகாரங்களை குறைக்கும் வகையிலும், கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையிலும் உள்ளதாக திரைத்துறையை சேர்ந்தவர்கள், நடிகர்கள் கமலஹாசன், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்து வந்தனர். அவர்களின் கருத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கையாகவும் கொடுத்தனர்.  

அதன் பேரில், ஒன்றிய அரசின் ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்றும் அந்த மசோதா தொடர்பான முயற்சிகளை கைவிட வேண்டும் என்றும் கேட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேக்கர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
‘ஒளிப்பதிவு திருத்த வரைவு திருத்த மசோதா 2021’ குறித்து, தமிழகத்தை சேர்ந்த திரைத்துறையினர் என் கவனத்துக்கு கொண்டு வந்த அச்சங்கள் குறித்து இந்த கடிதத்தை எழுதுகிறேன்.  

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒளிப்பதிவு திருத்த மசோதா திரைத்துறைக்கு மட்டும் அல்லாமல் கருத்து சுதந்திரத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள சமூகத்தின் பல தரப்பினரிடமும் தீவிர அச்சத்தை உருவாக்கியுள்ளது. ஒரு எழுச்சி மிக்க ஜனநாயக சமூகம், படைப்புச் சிந்தனை மற்றும் கலை சுதந்திரத்துக்கு தேவையான புலத்தை அளிக்க வேண்டும். ஆனால் இந்த திருத்த மசோதா, 20 ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதி மன்றத்தால் மத்திய அரசிடம் இருந்து நீக்கப்பட்ட திருத்த அதிகாரங்களை மீண்டும் தக்க வைத்து அவற்றை கட்டுப்படுத்துகிறது. மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம்(சிபிஎப்சி), அதற்கான விதி பிரிவு 5(ஏ)ல் குறிப்பிட்டுள்ள அனைத்து அளவீடுகளையும் பூர்த்தி செய்யும் திரைப்படங்களுக்கான சான்றை அளிக்கிறது.

சில குறிப்பிட்ட காரணங்களின் பேரில் சான்றளிக்காமல் அந்த திரைப்படத்தை நிராகரிக்கவும் இந்த சட்டம் வழி வகுக்கிறது. மேலும் இந்த சட்டத்தின் பிரிவு 5(பி)ன் கீழ் திரைப்பட உருவாக்கத்தை கட்டுப்படுத்துவற்கான ஏற்பாடுகளும் உள்ளன. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு, ஒரு படைப்பை கட்டுப்படுத்துவதற்கு மேலும் சட்டப் பிரிவுகளை சேர்ப்பது என்பது, இந்த 21ம் நூற்றாண்டு காலத்தில் அதிகப்படியானதாக தோன்றுகிறது. இந்த திருத்தத்தின் முன்னோடியாக, சிபிஎப்சிக்கு எதிராக மேல் முறையீட்டு அமைப்பாக செயல்பட்டு வந்த திரைப்பட சான்றிதழ் மேல் முறையீட்டு  வாரியம் அகற்றப்பட்டது.

சிபிஎப்சி  சான்றளித்த பிறகு மறு சீரமைப்பு அதிகாரத்தை மீட்டு எடுக்கும் வரைவுத் திருத்தம் இந்த அரசியல் அமைப்பின் 19(2)வது பிரிவின் கீழ் நியாயமான கட்டுப்பாட்டு பிரிவின் தவறான பயன்பாடு என்றும், இந்த திருத்த மசோதா பொதுச் சமூகத்தில் சரியான சிந்தனையை ஊக்குவிப்பதற்கு எதிராகவும் உள்ளது என்றும் கூற விரும்புகிறேன். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதா 2021ஐ திரும்பப் பெற வேண்டும். சிபிஎப்சி  சுதந்திரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் முற்போக்கான தேசம், கலை, கலாச்சாரம் மற்றும் திரைப்படத்  தயாரிப்புகளை உள்ளடக்கிய படைப்புச் சிந்தனை ஆகியவை அச்சம் ஏதும் இல்லாமல் மலரும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

* கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கிறது
அரசால், ஏற்கெனவே பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள், மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி ஒரு திரைப்படம் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் பொதுமக்கள் பார்வைக்காக சான்றளிக்கப்பட்டால், அது முதலில் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. ஏனென்றால் சட்டம் மற்றும் ஒழுங்கு அந்த மாநிலக் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் இப்போது மத்திய அரசு முன்மொழிந்துள்ள மசோதாவின் மூலம் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக இருப்பதோடல்லாமல், மாநில அரசு மற்றும் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் அதிகாரங்களை மத்திய அரசு மீற முயல்கிறது.

* படைப்பு சிந்தனையை முடக்குகிறது
‘‘ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதா 2021’’ திரைத் துறையின் படைப்புச் சிந்தனையை முடக்குவதாகவும் உள்ளது. மேலும், எப்படி திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்பதில் கட்டுப்பாடுகளை விதிப்பதை ஏற்க முடியாது. இது அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை கொள்கைக்கு எதிரானதாகும். கருத்து சுதந்திர உரிமையை திருப்பி எடுப்பது ஜனநாயகத்தை பலவீனமடையச் செய்யும்.

Tags : Chief Minister ,MK Stalin ,Union Ministers , Chief Minister MK Stalin's letter to Union Ministers: Draft Bill 2021
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...