அதிமுக அரசால் கொண்டு வந்த திட்டங்களை திமுக கொண்டுவந்தது போல் அமைச்சர் பேசுவது ஏற்புடையதல்ல: எடப்பாடி பழனிசாமி அறிக்கை

சென்னை: சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் தொழில் துவங்க முன்வரும் வெளிநாடு வாழ் தமிழ் மக்களுக்கு ரத்தின கம்பளம் விரித்து வரவேற்கவும், ”யாதும் ஊரே\” என்ற புதிய திட்டத்தை கடந்த சட்டப்பேரவையில் அறிவித்து, நேரடியாக சென்று அமெரிக்காவில் துவக்கி வைத்தேன். இதுதவிர, கொரோனா ஊரடங்கு காலத்தில் 2020ல் மே மாதம் முதலே தொழில் துறையின் வளர்ச்சிக்காக தொழில் துறை செயலாளர் தலைமையில் உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு தொழில் முனைவோரை அழைத்து  நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினேன்.

இதன் பயனாக, 2020-21 நடப்பு ஆண்டில் மட்டும் ரூ.60,674 கோடி முதலீட்டில் சுமார் 1,00,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 73 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. அதிமுக அரசு எடுத்த முயற்சியால் ஓலா நிறுவனம் ஏற்கனவே பணிகளை துவங்கி, தற்போது முடிவடையும் நிலையில் உள்ள ஒரு திட்டத்தை, ஏதோ இந்த ஒன்றரை மாத காலத்தில் கொண்டு வந்தது போல் அமைச்சர் தங்கம் தென்னரசு சொல்வது வியப்பாக உள்ளது. அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களை முடக்காமலும், மக்கள் நலனுக்காக புதிய திட்டங்களை கொண்டுவந்து, தொழில் துறையில் நாங்கள் ஏற்படுத்தி கொடுத்த அடித்தளத்தை செம்மையாக பயன்படுத்தி தமிழ்நாட்டை தொழில் துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்க தொடர்ந்து செயலாற்றுங்கள்.

Related Stories: