×

புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி குறைத்தீர்ப்பு அதிகாரியை எப்போது நியமிப்பீர்?...டிவிட்டருக்கு நாளை வரை கெடு

புதுடெல்லி: புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி இந்தியாவை சேர்ந்த குறைத்தீர்ப்பு அதிகாரியை எப்போது நியமனம் செய்வீர்கள் என்று நாளைக்குள் பதிலளிக்க டிவிட்டருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஒன்றிய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் டிவிட்டர் நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில், ஒன்றிய அரசு சார்பில் நேற்று முன்தினம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்டங்களை பின்பற்ற டிவிட்டர் தவறிவிட்டது. இது நாட்டின் சட்டம். இதை கட்டாயமாக பின்பற்ற வேண்டியது அவசியம்,’ என்று கூறி உள்ளது. இந்த வழக்கு நீதிபதி ரேகா பாலி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, ‘ஏற்கனவே சட்டங்களை கடைபிடிக்க வேண்டும் என்று நான் அவர்களிடம் (டிவிட்டர்) கூறியுள்ளேன். நான் அவர்களுக்கு எந்த பாதுகாப்பும் கொடுக்கவில்லை. அவர்கள் மீறினால், நீங்கள் (ஒன்றிய அரசு) சுதந்திரமாக நடவடிக்கை எடுக்கலாம். அவர்கள் இந்தியாவில் வேலை செய்ய விரும்பினால், அவர்கள் புதிய சட்டங்களை பின்பற்ற வேண்டும் என்பதை நான் ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளேன். புதிய சட்டங்களின்படி இந்தியாவை சேர்ந்த குறைத்தீர்ப்பு அதிகாரியை நியமிக்க எவ்வளவு காலம் வேண்டும் என்பதை ஜூலை 8ம் தேதிக்குள் (நாளை) டிவிட்டர் நிர்வாகம் தெரிவிக்க வேண்டும்,’ என கூறி வழக்கை ஒத்திவைத்தார்.

Tags : Twitter , New Information Technology Act, Criticism, Twitter,
× RELATED இளையராஜாவை மறைமுகமாக தாக்கினாரா...