×

மனநல காப்பகத்தில் இருப்போருக்கு கொரோனா பரிசோதனை, தடுப்பூசியை உறுதி செய்யுங்கள்: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: மன நல காப்பகத்தில் இருப்பவர்களுக்கு விரைவில் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடப்பட்டது என்பதை உறுதி செய்யும்படி ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் மனநல காப்பகங்களில் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்வதற்கு தகுதியான சுமார் 10000 பேர் இருப்பதாகவும், சமூகத்தில் ஏற்படும் பாகுபாடு அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் காப்பகங்களிலேயே இருப்பதற்கு கட்டாயப்படுத்தப்படுவதாகவும் வழக்கறிஞர் கவுரவ் பன்சால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. முன்னதாக இந்த வழக்கு விசாரணையின்போது மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தபின் அவர்களை டிஸ்சார்ஜ் செய்வதற்கு ஒரே மாதிரியான தேசிய கொள்கை தேவை என நீதிமன்றம் குறிப்பிட்டு இருந்தது.

மேலும் குணமடைந்த பின்னரும் மருத்துவமனை அல்லது காப்பகங்களில் தங்கியிருப்பவர்களின் மறுவாழ்வுக்கான திட்டத்தை தயாரிக்கும்படியும் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சந்திராசூட் மற்றும் எம்ஆர் ஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வானது, ” சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை சார்பில் 12ம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பங்கேற்று ஒத்துழைப்பு தர வேண்டும். குணமடைந்தும் மனநல காப்பகங்களில் இருப்பவர்கள் அல்லது யாருக்கு இன்னும் சிகிச்சை தேவை என்பது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள எண்ணிக்கையில் உள்ள முரண்பாடுகளை களையப்பட வேண்டும்.

பல பேர் மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்தும் அவர்களது குடும்பத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படுவது கிடையாது.  மகாராஷ்டிராவில் மனநல காப்பகத்தில் இருப்பவர்களை பிச்சைஎடுப்போர்  காப்பகத்துக்கு மாற்றும் பழக்கத்தை மாநில அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். மனநல காப்பகத்தில் இருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பதை ஒன்றிய அரசு உறுதி படுத்த வேண்டும்.” என்று உத்தரவிட்டனர். இந்த வழக்கு விசாரணை வருகிற 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : Supreme Court ,United States , Psychiatric care, Corona examination, Vaccine, United States, Supreme Court
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...