×

ஸ்டான் ஸ்வாமி மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி தலையிட வேண்டும்: சோனியா, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 10 தலைவர்கள் கடிதம்

புதுடெல்லி: ஸ்டான் ஸ்வாமி மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி தலையிட்டு அரசை வழிநடத்த வேண்டும் என்று ஜனாதிபதிக்கு சோனியா, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 10 தலைவர்கள் கடிதம் எழுதி உள்ளனர். ஜார்க்கண்ட் மாநில பழங்குடியினருக்காக குரல் கொடுத்தவர் ஸ்டான் ஸ்வாமி (84). திருச்சியை பூர்வீகமாக கொண்ட இவர், ராஞ்சியில் ஆதிவாசி மற்றும் பழங்குடியின மக்களுக்கு சேவை செய்து வந்தார். கடந்தாண்டு அக்டோபர் மாதம், மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடைய எல்கார் பரிஷத் வழக்கில் ஸ்டான் ஸ்வாமி உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மும்பை டலோஜா சிறையில் அடைக்கப்பட்டார். பார்க்கின்சன் நோய் மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பாந்த்ராவில் உள்ள ஹோலி பேமிலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் இறந்தார்.

 இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி இடைத் தலைவர்  சோனியா காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா  பானர்ஜி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தேசியவாத காங்கிரஸ் தலைவர்  சரத் பவார், மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் தலைவர் தேவகவுடா, தேசிய  மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, இந்திய கம்யூனிஸ்ட் டி.ராஜா,  மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் சீதாராம் யெச்சூரி, ராஷ்டிரிய ஜனதா தள தேஜஸ்வி  யாதவ் ஆகிய 10 தலைவர்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு ஒரு கடிதம் எழுதி  உள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

ஸ்டான் ஸ்வாமியின் மரணத்தில் எங்கள் ஆழ்ந்த  வருத்தத்தையும் சீற்றத்தையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த கடிதத்தை  எழுதுகிறோம். பார்க்கின்சன் உள்ளிட்ட பல்வேறு  நோயால் அவதிப்பட்டு வந்த ஸ்வாமிக்கு உரிய சிகிச்சை மறுக்கப்பட்டது. ஒரு நாடு  தழுவிய பிரச்சாரம் நடத்தப்பட்ட பின்னரே, சிறைச்சாலையில் அவருக்கு திரவ உணவுகள் கூட கிடைத்தது. கொரோனா பாதிப்பு அதிகமானதால் கூட்ட நெரிசலான தலோஜா  சிறையில் இருந்து அவரை வெளியேற்றுவதற்காக பல முறையீடுகள் செய்யப்பட்டன.  அவருடைய ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டன.  ஸ்டான் ஸ்வாமி மீது பொய்யான வழக்குகளை போட தூண்டியவர்கள்,  தடுப்பு காவலில் வைத்தவர்கள், மனிதாபிமானமற்ற சிகிச்சை அளிப்பதற்கு  காரணமானவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க தாங்கள் தலையிட்டு அரசை  வழிநடத்த வேண்டும்.

பீமா கோரேகான் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள  அனைவரையும், அரசியல் ரீதியாக வழக்குகள் சிறையில் உள்ள அனைவரையும், உபா  போன்ற கடுமையான சட்டங்களை தவறான முறையில் பயன்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளவர்களையும்  உடனடியாக விடுவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இறுதிச்சடங்கு நடந்தது
ஸ்டான் ஸ்வாமியின் இறுதிச்சடங்கு ஆராதனை, பாந்த்ராவில் உள்ள புனித பீட்டர்ஸ் சர்ச்சில் நேற்று நடந்தது. இந்த சடங்கு யூடியூப் சானல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன. அப்போது பாதிரியார் பிரேசர் மஸ்காரன்ஹாஸ், ஜோ சேவியர் உள்ளிட்டோர் நடத்திய இந்த ஆராதனையில், குறிப்பிட்ட சிலர் மட்டுமே பங்கேற்றனர். சடங்குகள் முடிந்த பிறகு அவரது உடல் எரியூட்டப்படும் எனவும், பின்னர் அவர் வாழ்ந்த ராஞ்சி மற்றும் ஜார்க்கண்டில் உள்ள ஜாம்ஷெட்பூர் ஆகிய இடங்களுக்கு சாம்பல் எடுத்துச் செல்லப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

‘ஒரு நிறுவன கொலை’
ஸ்டான் ஸ்வாமியின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் கூறுகையில், ‘‘ஸ்டான் !ஸ்வாமியின் மரணம்  ‘ஒரு நிறுவன கொலை’. கவனக்குறைவான சிறைச்சாலைகள், விசாரணை அமைப்புகளே இதற்கு பொறுப்பு. ஸ்வாமியைப் போன்ற  வயதானவர் மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஒரு  தொற்றுநோய்க்கு மத்தியில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது மனக்கவலை  அளிக்கிறது,’ என குற்றம்சாட்டி  உள்ளனர்.

Tags : President ,Stan Swamy ,Sonia ,MK Stalin , Stan Swamy, Action, President, Sonia, MK Stalin
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...