×

தமிழகத்துக்கு 1.08 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வருகை

சென்னை: தமிழகத்திற்கு மேலும் ரூ.1.08 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 288 கிலோ எடையில் 9 பார்சல்களில் மகராஷ்டிரா மாநிலம் புனேவிலிருந்து நேற்று மாலை 3.30 மணி விமானத்தில் வந்தது. தமிழகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது. அதிலும் 3வது அலையிலிருந்து தப்ப 2 டோஸ் தடுப்பூசிகளும் போட்டுக்கொள்வது அவசியம் என்று அரசு அறிவித்துள்ளதால், பொதுமக்களும் மிகுந்த ஆர்வமுடன் வந்து தடுப்பூசிகளை போட்டுக் கொள்கின்றனர்.

இதனால் தமிழகத்திற்கு அதிக அளவில்  தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. எனவே தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசிடம் கூடுதல் தடுப்பூசிகளை தமிழகத்திற்கு அனுப்பிவைக்கும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஜுலை மாதம் ஒன்றிய தொகுப்பிலிருந்து 71 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை தமிழகத்திற்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி மகராஷ்டிரா மாநிலம் புனேவிலிருந்து இம்மாதம் முதல் தேதி 2 விமானங்களில் புனேவிலிருந்து சென்னைக்கு 10.08 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழ்நாடு அரசுக்கு வந்தது. அதன்பின்பு ஒன்றிய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வரவில்லை. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. அதோடு சில இடங்களில் தடுப்பூசிகள் போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழ்நாடு அரசு மீண்டும் ஒன்றிய சுகாதாரத்துறைக்கு தடுப்பூசிகளை உடனே அனுப்பிவைக்க கோரிக்கை விடுத்தது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒன்றிய தொகுப்பு கிடங்கிலிருந்து தமிழகத்திற்கு தடுப்பூசி மருந்துகளை ஒன்றிய சுகாதாரத்துறை ஒதுக்கியது. அதன்படிநேற்று மாலை 3.30 மணிக்கு சென்னைக்குவந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் 1.08 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 288 கிலோ எடையில் 9 பார்சல்களில் சென்னை பழைய  விமான நிலையம் வந்தடைந்தன.

Tags : Gowishfield ,Tamil Nadu , 1.08 lakh Govshield vaccines arrive in Tamil Nadu
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...