நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள ஹவுசிங்போர்டு காலனியில் சாலை சீரமைக்கப்படுமா?

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகர பகுதியில் கடந்த சில வருடங்களாக பாதாளசாக்கடை பணி நடந்து வருகிறது. அதனுடன் புத்தன்அணை குடிநீர் திட்டத்திற்கு குழாய் பதிக்கும் பணியும் நடந்து வருகிறது. இதனால் மாநகர பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகள் மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. பணிகள் முடிக்கப்பட்ட பிரதான சாலைகள் தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது.

ஆனால் குடியிருப்பு பகுதியில் உள்ள சாலைகளை மாநகராட்சி கண்டுகொள்ளாமல் உள்ளது. இதனால் சாலைகள் மிகவும் மோசமாக இருந்து வருகிறது.

நாகர்கோவில் புன்னைநகரில் இருந்து ஹோலிகிராஸ் கல்லூரி செல்லும் சாலையில் 50வது வார்டுக்கு உட்பட்ட பகுதி ஹெவுசிங்ேபார்டு காலினியில் உள்ள 1வது தெரு மிகவும் மோசமாக உள்ளது.  இந்த காலனியில் மொத்தம் 3 தெருக்கள் உள்ளன. 3 தெருக்களும் மோசமாக உள்ளது. இருப்பினும் 1வது தெரு கடந்த 10 வருடகாலமாக மிகவும் மோசமாக உள்ளது. இதனை சீர் செய்ய மாநகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுபோல் 50வது வார்டுக்கு உட்பட்ட கோல்டன் நகரில் பாதாள சாக்கடை பணிக்கு பள்ளம் தோண்டப்பட்டு பல வருடங்கள் ஆகிறது.

இதுவரை அந்த சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது: நாகர்கோவில் நகராட்சியில் இருந்து மாநகராட்சி ஆனபிறகு வரிகள் உயர்த்தப்பட்டுள்ளது. வருடம் தோறும் அறிவிப்பு வெளியிட்டு வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது.  ஆனால் அத்தியாவசியமான தேவையான சாலை வசதி என்பது கேள்விகுறியாக உள்ளது. மாநகரத்தில் உள்ள பெரும்பாலான குடியிருப்பு பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது.

நாகர்கோவில் ஹவுசிங்போர்டு காலனியில் உள்ள 1வது தெருவில் சுமார் 100 வீட்டிற்கும் மேல் உள்ளது. இதுபோல் கோல்டன் நகரில் பல வீடுகள் உள்ளன. இந்த இரு சாலைகளும், சாலைகள் இருந்ததற்கான அடியாளம் கூட தெரியாத அளவிற்கு சேதமடைந்துள்ளது. மாநகராட்சி ஆணையர், மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாநகரில் குடியிருப்பில் பகுதியில் உள்ள சாலைகளையும் சீரமைக்க வேண்டும். என்றனர்.

Related Stories: