சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு!: கொடைக்கானலில் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களை மூட உத்தரவு..!!

திண்டுக்கல்: கொடைக்கானலில் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களை மூட கோட்டாட்சியர் முருகேசன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா 2ம் அலை மிகவும் தீவிரம் எடுத்திருந்தது. இதன் காரணமாக கடந்த 75 நாட்களாக கொடைக்கானலில் இருக்கக்கூடிய அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டிருந்தது. கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இறுதியாக வெளியிடப்பட்ட ஊரடங்கு தளர்வு அறிவிப்பில் இ பாஸ் முறையானது ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டி பூங்கா மற்றும் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்கள் நேற்று திறக்கப்பட்டது.

இதையடுத்து அதிகாரிகள் இன்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அச்சமயம் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகளவில் காணப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகள் யாரும் முகக்கவசம் அணியவில்லை. கொரோனா விதிமுறைகளும் முறையாக கடைபிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டி பூங்கா மீண்டும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நேற்று சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்ட நிலையில் மறு உத்தரவு வரும் வரை மூடப்படும் என்று கோட்டாட்சியர் அறிவித்துள்ளார்.

Related Stories:

>