×

உயர் கல்வி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசியில் முன்னுரிமை கோரி வழக்கு: ஒன்றிய, தமிழக அரசுகள் பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: உயர் கல்வி வழங்கும் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கும், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் முன்னுரிமை அளித்து கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்த கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஒன்றிய, மாநில அரசுகளுக்கும், பல்கலைக்கழக மானிய குழுவுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் தொடங்கியது முதல் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்வதால் மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாவதால், உயர் கல்வி பெறும் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கும், ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் முன்னுரிமை அளித்து கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்தி, வகுப்புகளை மீண்டும் துவங்க உத்தரவிட கோரி, நேர்வழி இயக்கம் அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், நாட்டில், 23.8 சதவீத வீடுகளில் மட்டுமே இணைய தள இணைப்புகள் உள்ளன.

10.7 சதவீத வீடுகளில் மட்டும் கணிப்பொறி வசதிகள் உள்ளது. 130 கோடி மக்கள் தொகையில், 30 கோடி மக்களிடம் மட்டுமே ஸ்மார்ட்போன்கள் உள்ளன என்று  கடந்த 2017ல் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் அனைத்து மாணவர்களும் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளும் வசதியை பெற்றிருக்கவில்லை. பல்கலைக்கழக மானிய குழு விதிகளின்படி, பொறியியல், சட்டம், மருத்துவம், கட்டிடக்கலை  படிப்புகளை ஆன் லைன் மூலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தொடர் ஊரடங்கு காரணமாக, பல்கலைக்கழக மானிய குழு விதிகளுக்கு முரணாக ஆன் லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனால், உயர்கல்வி மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பான கொள்கையை அமல்படுத்தி, அனைத்து கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கும், ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் முன்னுரிமை அளித்து கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும்.  

வகுப்புகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, வரும் 14ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு ஒன்றிய, மாநில அரசுகளுக்கும், பல்கலைக்கழக மானிய குழுவுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளது.

Tags : Union , Case seeking priority in corona vaccine for higher education students and teachers: Union, Tamil Nadu Governments Response Court order
× RELATED ஓட்டுப்பதிவு இயந்திரம்...