புலம்பெயர்ந்தோருக்கான சிலம்ப போட்டி; சிங்கப்பூரில் சாதித்த மயிலாடுதுறை வீரர்: முதல்பரிசை வென்று சாதனை

சிங்கப்பூர்: புலம்பெயர்ந்த  தொழிலாளர்களுக்கு இடையிலான சிலம்ப போட்டியில், மயிலாடுதுறை வீரர் முதல் பரிசை வென்று சாதனை படைத்தார். சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளியான தமிழகத்தை சேர்ந்த சந்திரகாசன் கணேசன் (33), புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான இடையிலான சிலம்ப போட்டியில் பங்கேற்றார்.  இப்போட்டியில் முதல் பரிசை வென்ற இவருக்கு, எஸ்ஜிடி 1,000 (இந்திய ரூ. 55,000) பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இதுகுறித்து சந்திரகாசன் கூறுகையில், ‘எனது 12 வயதில் இருந்தே தற்காப்புக் கலைகளை கற்கத் தொடங்கினேன்.

கடந்த 2010ம் ஆண்டில் நடந்த சிலம்ப போட்டிக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கம் வென்றேன். தற்காப்பு கலையான சிலம்ப போட்டியை, பலருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக ஊக்குவிப்பு போட்டிகளை நடத்தி வருகிறேன். சிலம்பு கற்றுக் கொள்வதால், உடற்பயிற்சி, உடல்நலம், மன ஆரோக்கியம் ஆகியன கிடைக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக சிங்கப்பூரில் வசித்து வருகிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக டேக்வாண்டோ விளையாட்டை, இங்குள்ள இளைஞர்களுக்கு கற்றுத் தருகிறேன்.

முதல் இடத்தை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் பெற்ற பரிசுத் தொகையில் பாதியை எனது சொந்த பயன்பாட்டிற்காகவும், மீதி பாதியை  மயிலாடுதுறையில் உள்ள எனது சொந்த கிராம மக்களுக்கு உணவளிக்க கொடுப்பேன். கொரோனா காலத்தில் வயதான பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு உதவுவேன்’ என்றார்.

Related Stories:

>