×

மேகதாது பகுதியில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடகா கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது!: டி.டி.வி. தினகரன்

சென்னை: மேகதாது பகுதியில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக அரசு கூறியிருப்பதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேகதாது அணை திட்டத்தை கைவிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேகதாது அணை திட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்று தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனை கருத்தில் கொள்ளாமல் அணை கட்டும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக எடியூரப்பா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், மேகதாது பகுதியில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக அரசு கூறியிருப்பதற்கு  டி.டி.வி. தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இப்பிரச்சனையில் தமிழக அரசு கடிதம் எழுதுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் அணை கட்டும் பணியினை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மேகதாது பகுதியில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடகா கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்றும் அப்படி ஓர் அணை உருவானால் ஒட்டுமொத்த தமிழகமும் பெரும் பாதிப்புக்கு ஆளாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

எனவே தமிழக அரசு கடிதம் மட்டும் எழுதுவதோடு நிறுத்திக்கொள்ளலாம் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து மேகதாது அணை பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் நீதிமன்றத்தின் வழியாகவும் சட்டபூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதேபோல் வடமாவட்டங்களின் பாசன ஆதாரமான தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்கண்டேய ஆற்றின் குறுக்கே ஊரடங்கு காலத்தில் கர்நாடகா புதிய அணையை கட்டி இருப்பது குறித்தும் இதற்காக கடந்த ஆட்சியில் தமிழகத்தில் இருந்து கட்டுமான பொருட்கள் அனுப்பியுள்ளதாக வெளியாகிய செய்திகள் பற்றியும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.


Tags : Karnataka ,Megha Dadu ,DTV Dinakaran , Megha Dadu, Dam, Karnataka, D.T.V. Dinakaran
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...