மூன்றாவது கண்ணில் சிக்கினால் எப்போதும் ஆபத்துதான்; குழந்தைகளின் ஆபாச படம் பதிவேற்றம்: சிறுவன் உள்பட 2 பேர் கைது

பெரம்பூர்: சமூகவலை தளத்தில் குழந்தைகளின் ஆபாச படத்தை பார்த்து ரசித்ததுடன் அவற்றை பதிவேற்றம் செய்த சிறுவன் உள்பட 2 பேரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்க போலீசாரும் தனியார் அமைப்பினர் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன்படி 18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆபாச படங்களை பார்க்க அனுமதி கிடையாது. இதை மீறி ஆபாச படம்  பார்க்கின்றவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து சிறையில் அடைத்துள்ளனர். கடந்த 2020ம் ஆண்டு குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததாக 2 பேஸ்புக் ஐடி களை சைபர் கிரைம் போலீசாருக்கு கொடுத்து அவற்றை பரப்பியவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் இவ்வழக்கை புளியந்தோப்பு சரக போலீசாருக்கு மாற்றினர். இதையடுத்து துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா உத்தரவின்படி, சைபர் கிரைம் போலீசார் இரண்டு ஃபேஸ்புக் ஐடிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில், குழந்தைகளின் படங்களை சமூகவலை தளத்தில் ஆபாசமாக பதிவேற்றம் செய்ததாக சென்னை வியாசர்பாடி மாணிக்கவிநாயகம் கோயில் தெருவை சேர்ந்த ராஜேஷ் (24) மற்றும் வியாசர்பாடி வஉசி தெருவை சேர்ந்த சிறுவனை கைது செய்தனர். இவர்கள் மீது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வீடியோக்களை பார்த்ததும் மற்றும் அவற்றை பதிவேற்றம் செய்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு  செய்துள்ளனர். இதன்பிறகு ராஜேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சிறுவனை ஒப்படைத்தனர்.

இதுகுறித்து புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா கூறியதாவது; சிறுவர்களின் ஆபாச படங்களை பார்ப்பது மற்றும் பதிவேற்றம் செய்வது சட்டப்படி குற்றமாகும் என்பதால் கைது செய்யப்படுவார்கள். ஆபாச படங்களை பார்க்கும்போது சிறுவர்கள் சம்பந்தமான ஆபாச படங்கள் திடீரென்று வந்தால் அதை கட் செய்துவிட்டு அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இணையதளத்தில் இருந்து வந்தது மீண்டும் வராமல் எவ்வாறு தடுக்க வேண்டும் என்பது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் மட்டுமே அந்த இணையதளங்களை முடக்க முடியும்.

சமூக வலைத்தளங்களில் அந்த குறிப்பிட்ட  ஆபாச படம் பார்த்து அப்படியே விட்டுவிட்டால் ஓராண்டு கழித்து கூட அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய முடியும். தற்போது அதுபோன்ற ஒரு சம்பவம்தான் நடந்துள்ளது. எனவே 18 வயதுக்கு உட்பட்டவர்கள் எந்தவொரு ஆபாச இணையதளங்களையும் பார்க்கக்கூடாது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆபாச இணையதளங்களை பார்த்தால் அதில் குழந்தைகளுக்கு  எதிரான ஆபாச படங்களை பார்க்கக்கூடாது.

அப்படி பார்த்தால் வீடியோக்களை பதிவேற்றம் செய்தால் சட்டப்படி அவர்கள் மீது எத்தனை நாள் கழித்து வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்க முடியும். எனவே இளைஞர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Related Stories:

More