×

செங்கல்பட்டு அருகே அடாவடி; பட்டாக்கத்தியுடன் மிரட்டிய வாலிபர் கைது: பொதுமக்கள் மறியலால் சமக நிர்வாகியும் கைதானார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பட்டாக்கத்தியுடன் மிரட்டிய வாலிபர் மற்றும் இரும்புக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். பொதுமக்கள் மறியலால் போலீசார்  அதிரடி நடவடிக்கை எடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் பொன்விளைந்தகளத்தூருக்கு செல்லும் வழியில் வ.உ.சி. நகர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக பழைய இரும்புக்கடை நடத்தி வருபவர் பொன்வேல். இவர், செங்கல்பட்டு மாவட்ட சமக நிர்வாகியாக இருந்து வருகிறார். இவரது கடையில் வட மாநிலத்தவர்கள் பலர் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் பொன்வேலி, கடையின் அருகே உள்ள ஏரியை ஆக்கிரமித்து பழைய இரும்பு தகரம், அலுமினியம், பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தையும் தனியாக பிரித்து மூட்டை மூட்டையாக அடுக்கி வைத்திருந்தார். மேலும், மருத்துவமனையில் ஒதுக்கப்படும் காலாவதியான மற்றும் உபயோகப்படுத்திய ஊசிகள், ரப்பர் யூப்கள், மருந்து கவர்கள், டானிக் பாட்டில்கள் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் கையுறைகள், மதுபான பாட்டில்கள், கெமிக்கல் தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடிய பழுதான பிளாஸ்டிக் கெமிக்கல் பேரல்கள் உள்பட பல்வேறு பழைய பொருட்களையும் குவியல் குவியலாகவும் மலைபோல தனித்தனியாக தரம் பிரித்து மூட்டையாக கட்டி போட்டிருந்தார்.

சாலை இருபுறமும் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு காயலாங்கடை பொருட்கள்தான் குவிந்து கிடக்கும். இதனால் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் சுமார் 4 ஆயிரம் குடும்பங்களுக்கு பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டது. தேக்கி வைக்கப்பட்டிருந்த பழைய மருத்துவ பொருட்களில் இருந்து கசியும் கழிவுகள் குடிநீரில் கலக்கிறது. மேலும், இந்த கடையில் வேலை பார்க்கும் வட இந்தியர்களால் இரவு நேரத்தில் பெண்கள் நடமாட முடியவில்லை. இதுகுறித்து கேட்டால் அடியாட்களை வைத்து பொன்வேல் மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் நேற்று இவரது கடையில் வேலை பார்க்கும் கார்த்திக் என்பவர் நள்ளிரவில் மது அருந்தி விட்டு கையில் பட்டா கத்தியை வைத்து கொண்டு பொரி கிளம்பும் வகையில் சாலையில் தேய்த்து கொண்டே அப்பகுதி மக்களை மிரட்டியுள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்தனர். இந்நிலையில், இன்று காலை சுமார் 100க்கும் மேற்பட்ட மக்கள், பொன்வேலின் இரும்பு கடையை நிரந்தரமாக அகற்ற கோரி பொன்விளைந்தகளத்தூர்- செங்கல்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து செங்கல்பட்டு ஏஎஸ்பி ஆசிஷ்பச்சேரா, செங்கல்பட்டு வட்டாட்சியர் ராஜேந்திரன் மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள், ‘உரிய அனுமதி இல்லாமல் எங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இயங்கும் இரும்பு கடையை அகற்ற வேண்டும், பட்டா கத்தி வைத்து பயமுறுத்தும் ரவுடிகளை கைது செய்ய வேண்டும்’ என்றனர். அதற்கு அதிகாரிகள், சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்து, விரைவில் இரும்பு கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கிறோம்’ என்று உறுதியளித்தனர்.
இதையடுத்து, பொன்வேல் மற்றும் கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர். இதனால் பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.


Tags : Adavati ,Chengalpattu , Adavati near Chengalpattu; Youth arrested for threatening with a sword: Co-administrator arrested for public outcry
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...