×

கோயில் முன்பு தூங்கி கொண்டிருந்தபோது பயங்கரம்; அருந்தமிழர் பேரவை பொதுச்செயலாளர் அரிவாளால் சரமாரி வெட்டிக்கொலை: நாமக்கல்லில் பரபரப்பு

பள்ளிபாளையம்: கோயில் முன்பு தூங்கி கொண்டிருந்த அருந்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவேரி ரயில் நிலையம் கரட்டாங்காடு பகுதியை சேர்ந்தவர் ரவி (46). இவருடைய மனைவி மலர். இவர்களுக்கு மகள், மகன் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. ஆதித்தமிழர் பேரவையின் நாமக்கல் மாவட்ட செயலாளராக இருந்து வந்த ரவி, கடந்த ஆறு வருடங்களாக அருந்தமிழர் பேரவை என்ற அமைப்பை உருவாக்கி அதன் பொதுச்செயலாளராக செயல்பட்டு வந்தார்.

இந்த அமைப்பின் மூலம், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அருந்ததியர் சமூக மக்களுக்கு ஆதரவாக பல்வேறு பிரச்னைகளுக்காக போராடி வந்தார். இந்த நிலையில், கரட்டாங்காட்டில் வீட்டின் அருகே உள்ள மதுரைவீரன் மாரியம்மன் கோயில் திடலில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் நேற்றிரவு ரவி தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள், தூங்கிக்கொண்டிருந்த ரவியின் தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இன்று காலை அவ்வழியாக சென்றவர்கள் ரத்த வெள்ளத்தில் ரவி சடலமாக கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர். இதுகுறித்து பள்ளிபாளையம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதையடுத்து ரவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அருந்ததியர் சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளில் பல்வேறு பிரச்னைகளில் ரவி தலையிட்டு பஞ்சாயத்து பேசி வந்துள்ளார்.

காதல் ஜோடிகளை சேர்த்து வைத்தல், நிலப்பிரச்னை தொடர்பாகவும் ரவி தலையிட்டு வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரண மாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து ரவியை வெட்டி கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Arunthamil Assembly General Secretary Scythe Massacre ,Namakkal , Horror when the temple was previously asleep; Arunthamil Assembly General Secretary Scythe Massacre: Tension in Namakkal
× RELATED நாமக்கல்லில் தொழிலதிபர் வீட்டில் வருமானவரி சோதனை