×

நாளை மறுநாள் ஒன்றிய அமைச்சரவை மாற்றி அமைக்க பிரதமர் மோடி திட்டம் : ஜோதிராதித்யா சிந்தியா உள்ளிட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பு

புதுடெல்லி: ஒன்றிய அமைச்சரவையை மாற்றி அமைக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாகவும் நாளை மறுநாள் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி 2வது முறையாக கடந்த 2019ல் பதவியேற்றது. இந்த ஆட்சியில் ஒருமுறை கூட அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவில்லை.

பாஜ கூட்டணியில் இருந்து சிவசேனா, சிரோன்மணி அகாலிதளம் போன்ற கட்சிகள் வெளியேறி விட்டதாலும், ராம்விலாஸ் பஸ்வான், சுரேஷ் அங்காடி ஆகியோர் காலமாகி விட்டதாலும் சில அமைச்சர் இடங்கள் காலியாக உள்ளன. ஒரே அமைச்சர்கள் சிலர் இரண்டு துறைகளை கவனிக்கும் நிலை உள்ளது. இதனால், அமைச்சரவையை மாற்றம் செய்ய பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மூத்த அமைச்சர்களுடன் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். நாளை மறுநாள் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே ஒன்றிய சமூக நிதித்துறை அமைச்சரான தாவர்சந்த் கெலாட் கர்நாடக மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய அமைச்சர்களாக காங்கிரசில்  இருந்து பாஜவில் சேர்ந்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஜோதிராதித்யா சிந்தியா உள்ளிட்டோருக்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.  அடுத்தாண்டு உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் நடக்க உள்ளதால் அதற்கேற்ப அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என தெரிகிறது.ஆரம்பத்தில் 10 புதிய அமைச்சர்கள் சேர்க்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. இப்போது 27 புதிய முகங்களுக்கு வாய்ப்பு தரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 


Tags : Modi ,Union Cabinet ,Jyotiraditya Cynthia , ஒன்றிய அமைச்சரவை
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்காக மத துவேஷ...