×

பொதுப்பணித்துறையின் முறையான பராமரிப்பின்றி பழைய குற்றால அருவி பாழாகும் அவலம்

தென்காசி : பொதுப்பணித்துறையின் முறையான பராமரிப்பின்றி பழைய குற்றாலம் அருவி பாழாகும் அவலம் தொடர்கிறது. வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வசதியாக ஆயிரப்பேரி பஞ்சாயத்து வசம் ஒப்படைக்க வேண்டுமென பரிந்துரைக்கப்பட்ட கோப்பு, கடந்த 10 ஆண்டாக உறங்குவதாக சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் விரும்பி சென்று குளிக்கும் இடமாக பழைய குற்றாலம் அருவி உள்ளது. குற்றாலம் மெயினருவி நகர்ப்புறத்தை ஒட்டினாற்போல் அமைந்துள்ள நிலையில் பழைய குற்றால அருவி, நகர்ப்புறங்களில் இருந்து சுமார் 8 கிமீ தொலைவில், வனப்பகுதிக்குள் சென்று குளித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தும். பழைய குற்றாலத்திற்கு என்றே தனியாக ரசிகர் கூட்டமே உள்ளது. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் பழைய குற்றால அருவியில் அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதாக சுற்றுலா பயணிகள் நீண்ட காலமாக தெரிவித்து வருகின்றனர்.

பயணிகள் நிழற்கூடம் கூட அங்கு இல்லை. பெயருக்கு 4 கடைகள் மட்டும் உள்ளது. அவற்றிலும் கதவுகளோ முறையான மேற்கூரையோ இல்லாமல் தண்ணீர் ஒழுகிய நிலையில் ஆண்டுதோறும் ஏலம் விடப்படுகிறது. கழிப்பிட வசதியும் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் பழுதடைந்த நிலையில் பயன்பாடற்ற நிலையில் உள்ளது. பெயருக்கு 3 உடை மாற்றும் அறைகள், ஒரு புறக்காவல் நிலைய அறையும் உள்ளது.

‌‌பழைய குற்றாலம் பொதுப்பணித்துறையின் நீர்ப்பாசன பிரிவு கட்டுப்பாட்டில் உள்ளது. மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்டவை உள்ளாட்சி நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் பழைய குற்றாலம் மற்றும் நீண்ட காலமாக நீர்ப்பாசன துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் காரணமாகவே வளர்ச்சி பணிகள் இங்கு முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கார் பார்க்கிங் கட்டண வசூல் உரிமம், கடைகள், கட்டண கழிப்பிடம் உள்ளிட்டவற்றை ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் வருவாயை பெற்றுக் கொள்ளும் பொதுப்பணித்துறை, வெள்ளை அடிப்பதுடன் மட்டும் தனது பராமரிப்பை நிறுத்திக் கொள்கிறது.

அருவிப்பகுதி பராமரிப்பை உள்ளாட்சி நிர்வாகம் வசம் ஒப்படைக்க பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு மறுப்பு தெரிவிக்கிறது. அவ்வாறு ஒப்படைத்தால் பாசன வசதி மேற்கொள்வதற்கு இடையூறாக அமைந்துவிடும் என்று ஒரு காரணத்தை கூறுகின்றனர். குற்றாலம் பேரூராட்சி கட்டுப்பாட்டில் உள்ள மெயினருவி, ஐந்தருவியில் இருந்து, இதேபோல் பாசனத்திற்கு தண்ணீர் பிரித்து விடப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனால் தூய்மைப் பணி, பழுது பார்க்கும் பணிகள், மராமத்து பணிகள் உள்ளிட்டவற்றை உடனடியாக மேற்கொள்கின்றனர்.

பேரூராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் தினமும் பணியில் ஈடுபடுகின்றனர். ஆனால் பழைய குற்றாலத்தில் தூய்மைப் பணிகளுக்கு என்று நீர்ப்பாசன துறையினர் பணியாளர்கள் யாரையும் நியமனம் செய்யவில்லை. ஆயிரப்பேரி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தான் தூய்மைபணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இப்போது பழைய குற்றாலத்தில் உள்ள கடைகளை ஏலம் விடுவதன் மூலம் பொதுப்பணித்துறைக்கு 40 லட்சம் ரூபாய் வரை வருவாய் கிடைப்பதாகவும் ஆனால் அந்த நிதியை பழைய குற்றாலத்திற்கு போதுமான அளவு செலவு செய்வதில்லை என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

பழைய குற்றாலம் அருவி பகுதியை ஆயிரப்பேரி ஊராட்சி நிர்வாகம் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்ட கோப்பு கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. தற்போது தென்காசி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கோப்பின் மீது உரிய நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை அப்பகுதி மக்கள் மத்தியில் உள்ளது.

பழைய குற்றாலம் அருவி பகுதியை உள்ளாட்சி நிர்வாகத்தின் வசம் ஒப்படைப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை விரைவாக எடுக்க வேண்டும் என்பதே ஆயிரப்பேரி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாகும்.

மாவட்டத்தின் வருவாய் ஆதாரம்

விவசாயத்திற்கு அடுத்ததாக தென்காசி  மாவட்டத்தின் வருவாய் ஆதாரமாக விளங்குவது குற்றால அருவிகள்தான். நாடு  முழுவதுமிருந்து ஆண்டுதோறும் சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான மக்களை 3  மாதத்திற்குள் சுண்டி இழுக்கும் அழகும், கம்பீரமும் நிறைந்தவை குற்றால  அருவிகள். மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி,  சிற்றருவி, கரடி அருவி என தரைமட்டத்தில் பல அருவிகள் அமைந்த ஒரே சுற்றுலாத்  தலம் இது மட்டுமே. வரலாற்று சிறப்புகள் பல கொண்ட குற்றால அருவிகள் சங்க  இலக்கிய காலத்திலேயே புகழ்பெற்று விளங்கின.

ஆண்டுதோறும் ஜூன் மாதம்  துவங்கும் தென்மேற்கு பருவமழைக்காலம் ஆகஸ்டில் நிறைவுறும் வரை குற்றால  அருவிகள் ஆர்ப்பரிக்கும். இந்த நாட்களில் வந்து செல்லும் சுற்றுலா  பயணிகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தே சிவகிரி முதல் ஆலங்குளம்,  புளியரை வரை உள்ள நகரங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொள்ளும்.  அதன் தொடர்ச்சியாக ஜனவரி வரை வரும் ஐயப்ப பக்தர்களாலும் சில மாதங்கள்  செழிப்பாகும்.

பஞ். சார்பில் உடனடி பணிகள்

ஆயிரப்பேரி பஞ்சாயத்து நிர்வாகத்தின்  சார்பில் நீதிமன்றத்தை அணுகி கார் பார்க்கிங் கட்டண வசூல் உரிமத்தை கடந்த  சில வருடங்களுக்கு முன்பு பெற்றுக்கொண்டனர். பொதுப்பணித்துறை வசம்  இருந்தபோது அதிகபட்சமாக ஆண்டு ஒன்றுக்கு 17 லட்ச ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட  நிலையில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தற்போது 49 லட்சம் ரூபாய்க்கு  கடைசியாக ஏலம் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆயிரப்பேரி ஊராட்சி  நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு வருவாய் துறையிடம் இருந்து  ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பை கையகப்படுத்தி பேருந்து நிலையம் அமைத்து  வருகின்றனர்.

இதற்காக சுமார் ரூ.1.5 கோடி வரை செலவு செய்துள்ளனர்.  பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து உள்ளாட்சி நிர்வாகத்தின்  கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி இதுவாகும்.  உள்ளாட்சி நிர்வாகத்தினர் மற்றும் பிரதிநிதிகள் அரசு அதிகாரிகளையும்,  சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தொடர்பு கொண்டு நிதிகளைப் பெற்று  பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வது போன்று பொதுப்பணித்துறையினர்  செயல்படுவது இல்லை என்று கூறப்படுகிறது.

Tags : Courtallam Falls ,Public Works Department , Coutrallam, Old Coutrallam Falls,No maintenance
× RELATED பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள...