×

கொரோனா களத்தில் அரவணைத்த இதயங்கள் மனித நேயத்தில் சுழன்றது பூமி

*சமூக மேம்பாட்டு ஆர்வலர்கள் நெகிழ்ச்சி

சேலம் : கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித்தவித்த ஏழை, எளிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் தன்னார்வலர்களாக பலர் உருவெடுத்தனர். இதனால் கடந்தற சில மாதங்களாக மனித நேயத்தை மையமாக கொண்டு இந்த பூமி சுழன்றது பெருமைக்குரியது என்று சமூக மேம்பாட்டு ஆர்வலர்கள் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் கோரத்தாண்டவம், மக்களை கடும் பீதியில் ஆழ்த்தியது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மே 24ம்தேதி தளர்வுகளற்ற ஊரடங்கை அரசு அறிவித்தது.

அரசு எடுத்த பல்வேறு துரித நடவடிக்கைளால் தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது.  பாதிப்புகள் குறைந்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதியில் ஆழ்ந்துள்ளனர். 55நாட்களுக்கு பிறகு, மாநிலம் முழுவதும் ஒரே அளவிலான தளர்வுகளுடன் இயல்புநிலை திரும்பியுள்ளது. இரண்டாவது அலையை பொறுத்தவரை இந்த 55நாட்களும் அனைத்து தரப்பு மக்களின் இயல்பு வாழ்க்கையையும் முடக்கி விட்டது என்றால் அது மிகையல்ல.

கோடிகளில் கொள்முதல் செய்த நிறுவனங்கள் முதல் குடிசைத் தொழில்கள் வரை அனைத்தும் முடங்கியது. இவற்றை வாழ்வதாராமாக கொண்டு பணியாற்றி வந்த ஊழியர்கள் முதல், எளிய கூலித்தொழிலாளர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆதரவற்ற நிலையில் தனித்துவிடப்பட்ட முதியவர்கள், மனநலம் குன்றிய நிலையில் வீதிகளில் சுற்றித்திரிவோர், சாலையோரங்களில் வசிக்கும் விழிம்புநிலை மக்கள், ஏழை, எளிய கூலித்தொழிலாளர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது.

இது போன்றவர்களுக்கு அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அதேபோல் களத்தில் நேரடியாக இறங்கி துயரம் துடைத்ததில் தன்னார்வலர்களின் பங்கும் அளப்பரியது. தற்போதைய கொரோனா களத்தில் தன்னார்வலர்கள் என்பவர்கள் ஒரு குழுவாக செயல்பட்டார்கள் என்பதைவிட, தனிமனிதர்கள் கூட, தன்னார்வலர்களாக களமிறங்கி பணியாற்றினர் என்பது நெகிழ்ச்சிக்குரியது. இந்தவகையில் ஏறக்குறைய 2மாதமாக மனிதநேயத்தை மையமாக கொண்டு இந்த பூமி சுழன்றது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இது குறித்து கொரோனா கால உதவிகள் மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்ட சமூக மேம்பாட்டு ஆர்வலர்கள் கூறியதாவது: பொதுவாக இயற்கை சீற்றங்களின் போதும், பேரிடர் காலங்களிலும் ஏதாவது ஒரு பகுதியில் மக்கள் பாதிக்கப்பட்டால், அங்கு இயல்பு நிலையும் பாதிக்கும். அது போன்ற நேரத்தில் பிற பகுதிகளில் வசிக்கும் மக்களும், தன்னார்வலர்களும் அவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வார்கள். ஆனால் தற்போதைய நிலையே வேறுவிதமாக உள்ளது. குறிப்பிட்ட பகுதிகள் மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த மக்களுமே கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் பாதிக்கப்பட்டனர்.

ஆனாலும் தங்களுக்கான பாதிப்புகளை கருத்தில் கொள்ளாமல் முடங்கிப்போன மக்களுக்கு உணவளித்தும், பல்வேறு உதவிகளை செய்தும் கரம் கொடுத்தனர். அதிலும் இந்த கொரோனா காலகட்டத்தில் பேரன்பு, புதியஅகராதி பயன்மரம், அமுதசுரபி, சேவகன், வெளிச்சம், நோபுட்வேஸ்ட்  என்று புதிய விடியல்களாய் எண்ணற்ற பெயர்களில் தனியாகவும், குழுக்களாகவும் நண்பர்களை ஒருங்கிணைத்து பலர் உதவிகளை செய்து துயர்துடைத்து வருகின்றனர்.

இதில் இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் என்று அனைத்து தரப்பினரும் இணைந்து கொண்டு தங்களால் இயன்ற சிறிய உதவியை தயக்கமின்றி கொடுப்பது மிகவும் பாராட்டுக்குரியது. இது போன்றவர்கள் அளித்த நம்பிக்கையால் தற்போது கொரோனா களத்தில் இருந்து, அடித்தட்டு மக்கள் மெல்ல மீண்டு வருகின்றனர். இக்கட்டான நேரத்தில் இப்படி உதவிக்கரம் நீட்டிய அனைவரும், இயல்பு நிலை வந்த பிறகும் இதுபோல் வழிகாட்டிகளாக நின்று இந்த மண்ணில் மனித நேயத்தை தழைக்கச் செய்ய வேண்டும். இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.

Tags : earth , Corona Virus, Corona Second wave, Helping hands,Humanity
× RELATED முடிவற்ற காலத்தின் எல்லையற்ற பரம்பொருள்