×

பாஜ அரசின் அடக்குமுறையே ஸ்டான் ஸ்வாமி உயிரை பறித்தது: வைகோ அறிக்கை

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்ட ஸ்டான் ஸ்வாமி, ஜார்கண்ட் மாநிலத்தில் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக பழங்குடி மலைவாழ் மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்துப் பணியாற்றி வந்தார். சமூகச் செயல்பாட்டாளராகவும், மனித உரிமைப் போராளியாகவும் திகழ்ந்த ஸ்டான் ஸ்வாமி, பழங்குடியின மக்களின் வாழ்வுரிமைக்காக போராடியவர், குரலற்றவர்களின் குரலாக ஓங்கி ஒலித்தவர்.

ஊபா சட்டத்தை ஏவி கடந்த ஆண்டு அக்டோபர் 8ம் தேதி ஸ்டான் ஸ்வாமியை பீமாகோரேகான் பொய் வழக்கில் சேர்த்து என்.ஐ.ஏ. கைது செய்தது. நடுக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த 83 வயது நிறைந்த முதியவரை கைது செய்து, மும்பை தலோஜா சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தினார்கள்.நடுக்கவாத நோயால் பீடிக்கப்பட்டிருந்த ஸ்டேன் சுவாமி கை நடுக்கத்தால் தண்ணீர்கூட குடிக்க முடியவில்லை என்று கூறி தன்னிடமிருந்து கைப்பற்றிய உறிஞ்சுக் குழல் மற்றும் உறிஞ்சுக் குவளையை வழங்க என்.ஐ.ஏ.வுக்கு உத்திரவிட வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்தார்.

ஆனால் என்.ஐ.ஏ., ஸ்டான் ஸ்வாமியிடமிருந்து உறிஞ்சு குழல் மற்றும் உறிஞ்சு குவளை எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று ஈவு இரக்கமின்றி நீதிமன்றத்தில் கூறியது. சிறை நிர்வாகத்தின் சித்ரவதையால் உடல்நலன் பாதிக்கப்பட்டிருந்த ஸ்டேன் சுவாமிக்கு பிணை வழங்கவும், சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது. கொடிய கொரோனா தொற்றுக்கு ஆளாகி கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையிலும் அவருக்கு பிணை வழங்க என்.ஐ.ஏ. எதிர்ப்பு தெரிவித்தது. பாஜ அரசின் கொடுமையான அடக்குமுறை ஸ்டான் ஸ்வாமி உயிரையே பறித்துவிட்டது. இந்தக் கொடூர மரணத்திற்கு ஒன்றிய பாஜ அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.



Tags : Stan Swamy ,BJP government ,Vaiko , Stan Swamy killed by BJP government repression: Vaiko report
× RELATED பிரச்சார் பாரதி தொலைக்காட்சி செய்தி...