×

நேபாளத்தில் பெய்து வரும் தொடர் கனமழை எதிரொலி!: உ.பி., பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு..தண்ணீரில் தத்தளிக்கும் கிராமங்கள்..!!

பாட்னா: நேபாளத்தில் பெய்து வரும் தொடர் கனமழை எதிரொலியாக உத்திரப்பிரதேசம், பீகார், அசாம் உள்ளிட்ட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பருவமழையின் காரணமாக நேபாளம் அதிகளவில் மழைப்பொழிவை பெற்று வருகிறது. இதனால் பீகாருக்கு வரும் நதிகளான பாக்மதி, புர்கி கந்தக் மற்றும் கமலா ஆகியவற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தொடர்ந்து, வடக்கு பீகாரில் நதிக்கரையோரம் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பல கிராமங்கள் நீரில் மூழ்கியதால் அங்குள்ள மக்கள் வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். வாகனங்கள் செல்ல முடியாத இடங்களுக்கு அதிகாரிகள் மாட்டு வண்டியில் சென்று வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தனர். கிழக்கு சம்பாரண் மாவட்டத்தின் சுகோலி ரயில் நிலையம் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசத்தின் சரயு நதியிலும் நீர்மட்டம் அபாய அளவை எட்டி வருகிறது. இதனால் அயோத்தியா அருகே ஆற்றங்கரையோர கிராமங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு வீடுகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மணல் மூட்டைகள் அடுக்கி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல பிரம்மபுத்திரா ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் அசாம் மாநிலத்தின் கரையோர மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அபாய அளவை தாண்டி ஓடும் நீரின் அளவு நாள்தோறும் 10 முதல் 20 அங்குலம் உயர்ந்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : Nepal ,UP ,Bihar , Nepal, Heavy rains, UP, Bihar, floods
× RELATED சிஏஏ விவகாரத்தில் என்னை யாரும்...