×

குஜிலியம்பாறை அருகே புதிய தடுப்பணையில் ஷட்டர் பழுது

குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை அருகே விராலிபட்டியில் புதிதாக கட்டப்பட்ட தடுப்பணையில் பணி நிறைவடையும் காலம் ஒரு வருடத்திற்கு முன்பே ஷட்டர் பழுதானதால் மழைநீர் முழுவதும் வீணாகி வெளியேறியது. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.  பாளையம் பேரூராட்சி விராலிபட்டி குளத்தில் கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.291.85 லட்சம் செலவில் புதிய தடுப்பணை கட்டப்பட்டது.

பணி நிறைவடையும் காலம் 1.8.2021 என்ற ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் பணி தொடங்கப்பட்டது. விராலிபட்டியை சுற்றியுள்ள காட்டமநாயக்கன்பட்டி, மஞ்சாநாயக்கனூர், சித்திலப்பள்ளி, உரல்உருட்டுப்பட்டி, இலுப்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கவும், விவசாயம் பயன்பெறும் வகையிலும் இந்த தடுப்பணை கட்டப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குஜிலியம்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதில் விராலிபட்டி குளம் மழைநீர் வரத்து அதிகரித்தது.

ஆனால் புதிதாக கட்டப்பட்ட தடுப்பணையில் ஷட்டர் பழுதாகி இருந்ததால், மழைநீர் முழுவதும் ஷட்டர் இடைவெளி வழியே வீணாகி சென்றது. மழைநீர் முழுவதும் வீணாகி சென்றதை கண்ட கிராம மக்கள், விவசாயிகள் மிகவும் வேதனையடைந்தனர். வெளியேறிய மழைநீர் முழுவதும் இலுப்பப்பட்டி வாகைக்குளத்திலும், குஜிலியம்பாறையில் உள்ள சின்னக்குளம், பெரியகுளத்தில் வீணாகி சென்றது.

இது குறித்து கிராமமக்கள் கூறுகையில், விராலிபட்டியை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் நோக்கில், நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்க புதிதாக கட்டப்பட்ட தடுப்பணை தற்போது பயனற்று போய்விட்டது. குஜிலியம்பாறை பகுதியில் மழை பெய்வதே அபூர்வமாக உள்ளது. அதிலும் பெய்த பலத்த மழை நீரை சேமிக்க முடியாமல் போனது கடந்த அதிமுக ஆட்சியின் அவலம் இது. புதிதாக கட்டப்பட்ட நீர்தேக்க அணையின் பணி நிறைவடையும் காலம் ஓராண்டு. அதாவது 1.8.2021 அன்று தான் நிறைவடையும் காலம் உள்ளது.

 அதற்கு முன்பாக ஷட்டர் பழுது ஏற்பட்டுள்ளது. பழுதான ஷட்டரை விரைந்து சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Tags : Kujiliampara , Farmers, Shutter Damaged, Gujiliyamparai
× RELATED குஜிலியம்பாறையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்