×

பழநி அருகே கி.பி 2ம் நூற்றாண்டை சேர்ந்த அரிகண்ட சிற்பம் கண்டுபிடிப்பு

பழநி : பழநி அருகே கிபி 2ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிகண்ட சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே அக்கமநாயக்கன்புதூரில் உள்ள செங்கழனியம்மன் கோயில் வளாகத்தில் தொல்லியாளர் ஆய்வாளர் நந்திவர்மன், பழநியாண்டவர் கல்லூரி வரலாற்றுத்துறை தலைவர் ரவிச்சந்திரன், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வரலாற்றுத்துறை தலைவர் ராஜேஸ்வரி களஆய்வு மேற்கொண்டனர். அப்போது 2 அரிகண்ட சிற்பங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறுகையில், ‘‘எதிரி நாட்டின் மீது போர் தொடுக்கும்போது தன் நாட்டுப்படைகள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும், ஊரை காப்பாற்றுவதற்காகவும், தன் நாட்டு அரசன் உடல்நலமில்லாமல் இருக்கும்போது உடல்நலம் பெற வேண்டும் என்பதற்காகவும் தன்னுடைய தலையை வெட்டி கொற்றவைக்கு பலி கொடுத்து,

உயிர் தியாகம் செய்யும் வீரனுக்கு அரிகண்ட சிற்பங்கள் செய்து வழிபடுவது வழக்கம். பழங்காலத்தில் அரிகண்டம் கொடுக்கும் நிகழ்ச்சி பெரிய விழா போலவே நடந்திருக்கிறது. செங்கழனியம்மன் கோயில் வளாகத்தில் 2 அரிகண்ட சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. சிற்ப அமைப்பை பார்க்கும்போது கிபி 1 மற்றும் 2ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்க வேண்டும்.

சிற்பங்கள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும் காற்று மழை போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. வீர தீர செயல் புரிந்தவர்களின் அடையாளமாகவே அரிகண்ட சிற்பங்கள் கருதப்படுகிறது. இவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : Palanni , Palani, Arikanda Sculpture,
× RELATED கந்த சஷ்டி விழா: பழநி கோயிலில் சண்முகருக்கு திருக்கல்யாணம்