யூ- டியூப்பில் சிறுவர், சிறுமியரிடம் ஆபாச பேச்சு, பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!!

சென்னை: யூ - டியூபர் பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது என்று சென்னை காவல் ஆணையர் தெரிவித்திருக்கிறார். பப்ஜி விளையாட்டில் ஆபாசமாக பேசி யூ டியூப்பில் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் மதன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தார்கள். குறிப்பாக 160க்கும் மேற்பட்ட புகார்கள் வந்ததை அடுத்து அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதோடுமட்டுமின்றி அவரையும் அவரது மனைவி கிருத்திகாவையும் போலீசார் கைது செய்திருந்தனர். குறிப்பாக தடை செய்யப்பட்ட பப்ஜியை விளையாண்டு அதில் சிறுவர், சிறுமியர்களிடம் அவதூறாக பேசும் வகையில் வீடியோ பதிவிட்ட காரணத்தினால் அவர் கைது செய்யப்பட்டார்.

அவரது சொத்துக்கள் அனைத்தும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் முடக்கப்பட்டன. மேலும் பணமோசடி செய்ததாகவும், பல பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் பப்ஜி மதன் மீது குண்டர் சட்டமானது பாய்ந்திருக்கிறது. பெண்களை அவதூறாக பேசுதல், மானபங்கம் படுத்துதல், மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த பல நபர்கள் மீது குண்டர் சட்டமானது பாய்ந்து வருகிறது. அந்த வரிசையில் குற்ற தன்மையை பொறுத்து பப்ஜி மதன் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்திருக்கிறார்.

Related Stories: