×

இந்தோனேசியாவில் பிராண வாயு தட்டுப்பாட்டால் அதிகரிக்கும் உயிரிழப்பு!: ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க தயாரிப்பாளர்களுக்கு ஆணை..!!

யோக்யகர்தா: இந்தோனேசியாவில் பிராண வாயு தட்டுப்பாடு காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க அந்நாட்டில் உள்ள  ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக இந்தோனேசியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனைகளுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால் ஆக்சிஜன் கையிருப்பு குறைந்துவிட்டதால் பல்வேறு மருத்துவமனைகளில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பிராண வாயு சிலிண்டர்களுடன் மக்கள் ஆக்சிஜன் விநியோக நிறுவனங்களை முற்றுகையிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அங்குள்ள மக்கள் தெரிவித்ததாவது, ஆக்சிஜன் வாங்குவதற்காக மிக நீண்ட வரிசையில் மக்கள் நின்று கொண்டுள்ளனர். நான் ஒருமணி நேரமாக நிற்கிறேன். என் கணவர் மருத்துவமனையில் உள்ளார். அங்கு ஆக்சிஜன் இருப்பு இல்லை என தெரிவித்துவிட்டனர். அதனால் நாங்களே சிலிண்டர்களை கொண்டு வந்து எங்கள் செலவிலேயே ஆக்சிஜனை நிரப்பி மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோம் என குறிப்பிட்டார். இந்தோனேசியாவில் கொரோனா தொற்று திடீரென அதிகரித்துவிட்டதால் ஆக்சிஜன் தேவை 4 மடங்கு உயர்ந்துவிட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சமாளிக்கும் விதமாக உற்பத்தியை அதிகரிக்குமாறு ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இறுதியில் இருந்து இந்தோனேசியாவில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 29,745 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு நாள் ஒன்றுக்கு 500க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகி வருகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டினால் மட்டும் 2 நாட்களில் 63 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்தோனேசியாவின் மொத்த உயிரிழப்பு 61 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தொற்று அதிகம் உள்ள நாடுகளின் அட்டவணையில் இந்தோனேசியா 16வது இடத்தில் உள்ளது. ஆக்சிஜனுக்கு தேவை பன்மடங்கு அதிகரித்து வரும் நிலையில் அண்டை நாடுகளிடம் உதவி கோர இந்தோனேசியா அரசு முடிவு செய்துள்ளது.

Tags : Indonesia , Indonesia, oxygen shortage, oxygen production
× RELATED இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்