செமஸ்டர் தேர்வு முறையை கொண்டு வரும் சி.பி.எஸ்.இ!: 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் 2 பொதுத் தேர்வுகள் நடத்த திட்டம்!!

டெல்லி : 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு பொதுத் தேர்வுகளை நடத்த சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு இணையதள வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அடுத்தடுத்த அலை காரணமாக பள்ளிகளை திறப்பதிலும் தேர்வு நடத்துவதிலும் சிக்கல் நீடிக்கிறது. பொதுத் தேர்வை பொறுத்தவரை கடந்த ஆண்டு சில பாடங்களுக்கும் இந்த ஆண்டு அனைத்து பாடங்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் புதிய முறையில் தேர்வுகளை நடத்த சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம்  முடிவு செய்துள்ளது. டர்ம் 1 மற்றும் டர்ம் 2 என 2 பருவத் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அதற்கு ஏற்ப பாடத்திட்டங்கள் இரண்டாக பிரிக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.தலா 90 நிமிடங்கள் அடங்கிய தேர்வுகள் இருக்கும் என்றும் அதற்கான கேள்வி தாள் மற்றும் மதிப்பிடும் முறை குறித்த அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் - டிசம்பர் மாதங்களில் முதல் தேர்வும் அடுத்த ஆண்டு மார்ச் - ஏப்ரல் மாதங்களில் அடுத்த தேர்வும் நடத்த திட்டமிட்டுள்ள சிபிஎஸ்இ, 2 தேர்வுகளின் அடிப்படையில் கல்வியாண்டு இறுதியில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க முடிவு செய்துள்ளது. சரியான பதிலை தேர்வு செய்யும் கேள்விகள் முதல் பருவ தேர்வில் இருக்கும் என்றும் மாணவர்களின் திறமைகள், திறன்களை மதிப்பிடும் வகையில் பள்ளி அளவிலான உள் மதிப்பீட்டிற்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் வகையில் கேள்விகள் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.சிபிஎஸ்இ இணையதளத்தில் மாணவர்களின் மதிப்பிட்டு மதிப்பெண்களை பள்ளிகள் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதே போல் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 இடைத் தேர்வுகளுடன் பாடங்களை அவர்கள் கவனிக்கும் திறமையும் பரிசோதிக்கப்படும்.

11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு பாட தலைப்பிற்கு பிறகும்  பாடத்தை கவனிக்கும் திறன், செய்முறை தேர்வு போன்றவற்றிற்கு பள்ளிகள் அளவில் மதிப்பீடு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.மாதிரி மதிப்பிடல் முறை, கேள்வி வங்கி ஆசிரியர்களுக்கான பயிற்சி போன்றவற்றுக்கான வழிமுறைகள் ஆகிய தகவல்கள் பள்ளிக்கு வழங்கப்படும் என கூறி இருக்கும் சிபிஎஸ்இ மறு அறிவிப்பு வரும் வரை ஆன்லைன் வாயிலாகவே வகுப்பு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது .

Related Stories:

>