×

பாரதியார் பல்கலை துணைவேந்தர் அறையில் ஓய்வு பெற்ற அன்றே பதிவாளர் பாஜவில் இணைந்து புகைப்படம்: சர்ச்சை கிளம்பியதால் மறுநாளே வெளியேறினார்

கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் ஓய்வு பெற்ற அன்றே, துணைவேந்தர் அறையில் பாஜவில் இணைந்ததாக புகைப்படம் வெளியானது. ஆனால், மறுநாளே கட்சியைவிட்டு வெளியேறி விட்டார். கோவை பாரதியார் பல்கலைக்கழக பதிவாளராக பதவி வகித்து வந்தவர் கடற்கரை முருகன். இவர், கடந்த மாதம் 30ம் தேதி பணியில் இருந்து ஓய்வுபெற்றார். பின்னர், அன்றைய தினமே பாஜவில் இணைந்தார். இவருக்கு, பாஜ மாநில இளைஞர் அணி செயலாளர் டாக்டர் பிரீத்தி லட்சுமி மற்றும் மாநில ஊடக பிரிவு செயலாளர் சபரிகிரீஸ் ஆகியோர் பாஜ உறுப்பினர் அட்டையை நேரில் வழங்கினர். அத்துடன், மூவரும் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படம், பல்கலைக்கழக வளாகத்தில், துணைவேந்தர் காத்திருப்பு அறையில் எடுக்கப்பட்டது.

இதை டாக்டர் பிரீத்தி லட்சுமி டுவிட்டரில் பதிவு செய்தார். பல்கலைக்கழக வளாகத்தில் பாஜ கட்சியில் சேரும் போட்டோ எடுக்கப்பட்ட விவகாரம், சர்ச்சையை கிளப்பியதால், அந்த பதிவை சில மணி நேரத்தில் நீக்கிவிட்டார். இந்த விவகாரம், சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைப்பார்த்து அதிர்ச்சியுற்ற கடற்கரை முருகன், மறுநாளே, பாஜ உறுப்பினர் அட்டையை, செய்தி தொடர்பாளர் சபரிகிரீஸ் வசம் திருப்பிக்கொடுத்து, கட்சியில் இருந்து வெளியேறி விட்டார்.  இது குறித்து கடற்கரை முருகன் கூறுகையில், ‘‘ஓய்வுக்கு பிறகு அரசியல் கட்சியில் சேர்ந்து பொது சேவை செய்ய விரும்பினேன். அதன்படி, பாஜவில் இணைய விருப்பம் தெரிவித்து, குறிப்பிட்ட எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தேன். ஒருசில தினங்களில் கட்சி நிர்வாகிகள் என்னை நேரில் சந்தித்து உறுப்பினர் அட்டையை கொடுத்தனர். நான், மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டேன்.

ஆனால், இதுபற்றி பலரும் பலவாறு என்னிடம் கருத்து கேட்டனர். இது, எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. அதனால், மறுநாளே கட்சியில் இருந்து வெளியேறி விட்டேன். உறுப்பினர் அட்டையையும் திருப்பிக்கொடுத்து விட்டேன்’’ என்றார். பாஜ செய்தி தொடர்பாளர் சபரிகிரீஸ் கூறுகையில்,  ‘‘நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தி கட்சியில் சேர்க்கவில்லை. மிஸ்டுகால் கொடுத்து கட்சியில் இணையும் திட்டத்தின்படி, கட்சியில் சேர யார், யாரெல்லாம் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு அடையாள அட்டை கொடுத்து, கட்சி உறுப்பினராக்கிக்கொள்வது எங்களது கடமை. அதை சரியாக செய்து வருகிறோம். அவர் கட்சியை விட்டு வெளியேறுவதாக உறுப்பினர் அட்டையை திருப்பிக்கொடுத்தார். நாங்களும் அதை ஏற்றுக்கொண்டோம்’’ என்றார்.

Tags : Bharathiyar University ,Registrar ,Bajaj , Bharathiyar University, Vice Chancellor
× RELATED கட்டுப்பாடுகளால் வாகன விலை 2 மடங்கு...