×

சுற்றுலாப்பயணிகள் கும்மாளம்: பாம்பன் கடல் பகுதியில் படகில் ‘பக்... பக்’ சவாரி: உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ராமேஸ்வரம்: பாம்பன் கடலில் சிறிய நாட்டுப்படகில் கும்மாளமிட்டபடி சுற்றுலாப்பயணிகள் ஆபத்தான முறையில் சவாரி செய்கின்றனர். விதிகளை மீறும் படகு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் சட்டத்திற்கு புறம்பாக சுற்றுலாப்பயணிகளை சிறிய நாட்டுப்படகுகளில் ஏற்றிச் சென்று படகு சவாரி நடத்தப்படுகிறது. போலீசாரும், மீன்வளத்துறை அதிகாரிகளும், போதிய அக்கறை காட்டாததால் ஆபத்தான இந்த படகு சவாரி தொடர்ந்தவண்ணம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை பாம்பன் தெற்குவாடி கடற்கரை பகுதியில் இருந்து 10க்கும் மேற்பட்டோர் சிறிய நாட்டுப்படகில் ஏறி கடலில் சவாரி சென்றனர்.

படகை ஒட்டி சென்றவர் உட்பட 3 பேரை தவிர, மற்றவர்கள் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் என்பது தெரிய வந்தது. பாம்பன் தூக்குப்பாலத்திற்கு கீழே கால்வாய் பகுதியில் சென்றபோது, படகில் கும்மாளமிட்டு, செல்பி எடுத்து ஆட்டம் போட்டபடி சென்றனர். படகில் இருந்த மீனவர்கள் உட்பட யாரும் உயிர்காப்பு மிதவைகள் அணியவில்லை. படகு கவிழ்ந்தால் நீரோட்டத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது என்று தெரிந்தும், சுற்றுலாப்பயணிகளை மீனவர்கள் ஏற்றி சென்றுள்ளனர். பாம்பன் கடலில் சட்டத்துக்கு புறம்பாக படகு சவாரி நடத்துபவர்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Kummalam ,Pamban , Tourists, owners, activity
× RELATED கடலுக்கு சென்று உயிரிழந்த மீனவர்கள்...