யூரோ கோப்பை அரையிறுதி: இத்தாலி - ஸ்பெயின் இன்று பலப்பரீட்சை

லண்டன்: யூரோ கோப்பை தொடரில் இன்று நள்ளிரவில் நடைபெறும் முதல் அரையிறுதியில்  இத்தாலி - ஸ்பெயின்  அணிகள் மோதுகின்றன. யூரோ கோப்பை கால்பந்து தொடரில், லண்டன் வெம்ப்ளி ஸ்டேடியத்தில்  இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கும் முதல் அரையிறுதியில்  ஸ்பெயின் - இத்தாலி அணிகள் மோதுகின்றன. கால்பந்து உலகின்  ஜாம்பவான்களான  இந்த இரு அணிகளும் மோதும் ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  யூரோ தொடரில் ஸ்பெயின் அணி 4 முறை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அந்த 4 முறையும் ஸ்பெயின் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. அதில்  3 முறை (1964, 2008, 2012) கோப்பையை வென்றதுடன், ஒருமுறை 2வது இடத்தை பெற்றிருக்கிறது.

இத்தாலி 5 முறை அரையிறுதியில் விளையாடி உள்ளது. அவற்றில் 3 முறை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. அதில் ஒருமுறை (1968) கோப்பையை வசப்படுத்தியுள்ளது. 2 முறை 2வது இடத்தை பிடித்துள்ளது. அதில் ஒரு இறுதிப் போட்டியில் (2012)  ஸ்பெயின் அணியிடம்தான் இத்தாலி மண்ணை கவ்வியது.

ஆனால் இந்த தொடரில் நிலைமை வேறு.  லீக் சுற்று  முதல் ஒரு போட்டியில் கூட தோற்காமல், டிரா செய்யாமல், பெனால்டி ஷூட் அவுட் வரை ஆட்டத்தை நீட்டிக்காமல் வெற்றி வாகை சூடிய அணியாக இத்தாலி திகழ்கிறது. அதே சமயம் ஸ்பெயின்  லீக் சுற்றில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்ற 2 ஆட்டங்களில் டிரா செய்துதான் நாக் அவுட் சுற்றுக்குள் நுழைந்தது.

காலிறுதியிலும் பொனால்டி ஷூட் அவுட் வரை சென்றுதான் சுவிட்சர்லாந்தை வென்றது. எப்படி இருந்தாலும் பழைய வரலாறுகள் ஸ்பெயினுக்கு சாதகமாகவும், நடப்பு நிலைமைகள்  இத்தாலிக்கு சாதகமாகவும் இருக்கின்றன. இரு அணிகளும் ஏற்கனவே மோதிய ஆட்டங்களும் அதைத்தான் சொல்கின்றன. ஆனால், இன்று களமும் மாறியிருக்கிறது, வீரர்களும் மாறியிருக்கிறார்கள்.... அந்த மாற்றங்கள் என்ன முடிவை தரும் என்பது இன்றைய ஆட்டத்தின் முடிவில் தெரியும்.

கடைசியாக...

இந்த இரு அணிகளும் கடைசியாக  விளையாடிய 6 சர்வதேச ஆட்டங்களில் ஒன்றில் கூட தோற்கவில்லை. இத்தாலி தனக்கு எதிராக விளையாடிய 6 நாடுகளையும் வீழ்த்தியுள்ளது. அதே நேரத்தில் ஸ்பெயின் தோற்கவில்லை என்றாலும் 6ல் 2 ஆட்டங்களில் டிரா செய்துள்ளது.

Related Stories:

More
>