ஒன்றிய கல்வி அமைச்சர் தகவல்: சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு அடுத்த மாதம் நடக்கும்: விருப்பமுள்ள மாணவர்கள் அனைவரும் எழுதலாம்

டெல்லி: மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, 12ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் குறித்து மதிப்பீடு செய்வதற்கான விரிவான மதிப்பீட்டு திட்டத்தை ஒன்றிய அரசு வெளியிட்டது. அதில், இதற்கு முன்னர் எழுதிய பொதுத்தேர்வுகள், அலகுதேர்வுகள், இடை பருவத்தேர்வுகள் மற்றும் செய்முறை தேர்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஒன்றிய அரசு அறிவித்த இந்த மதிப்பீட்டு முறையில் திருப்தி இல்லாத மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் ரத்து செய்யப்பட்டன.

தற்போது கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால், சிபிஎஸ்இ பொதுத்தேர்வு மற்றும் பிற நுழைவுத்தேர்வுகளை நடத்துவதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இது குறித்து ஒன்றிய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று வெளியிட்ட ஆடியோ பதிவில், ``சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மதிப்பெண் வழங்கும் நடைமுறையில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு அடுத்த மாதம் தேர்வு நடத்தப்படும். எனவே மாணவர்கள் கவலை கொள்ள வேண்டாம். விருப்பமுள்ள மாணவர்கள் எழுத்து தேர்வுக்கு நேரில் ஆஜராகலாம்,’’ என்று தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்இ வெளியிட்ட டிவிட்டர் பதிவில், `கல்வியாளர்களின் ஆலோசனைப்படி, வரும் கல்வியாண்டில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் 2 பருவ நிலைகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவத்திலும் 50 சதவீத பாடங்களாக பிரித்து நடத்தப்படும். அடுத்த கல்வியாண்டிற்கான பாடத்திட்டம் இம்மாத இறுத்திக்குள் அறிவிக்கப்படும்,’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>