×

முட்டுக்காடு சொத்து விற்பனை தொடர்பாக ஐடி அனுப்பிய நோட்டீசை எதிர்த்த கார்த்தி சிதம்பரத்தின் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வருமான வரி மறுமதிப்பீட்டிற்காக அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து கோரி கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் முட்டுக்காட்டில் உள்ள தங்களுக்கு சொந்தமான சொத்துகளை கடந்த 2015ம் ஆண்டு அக்னி எஸ்டேட்ஸ் பவுன்டேசன் என்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளனர். சந்தை மதிப்பின்படி ஒரு ஏக்கர் 3 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டு விற்பனை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகைக்கு மட்டும் வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டப்பட்டுள்ளது.

கார்த்தி சிதம்பரம் பெற்ற ரொக்கப்பணம் 6.38 கோடி ரூபாயை கணக்கில் காட்டவில்லை எனக் கூறி, 2014-15, 2015-16ம் ஆண்டுகளுக்கான வருமான வரிக்கணக்கை மறுமதிப்பீடு செய்வது தொடர்பாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி கார்த்தி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், வருமான வரித்துறை, வருமான வரிக் கணக்குகளுக்கான மதிப்பீட்டையும், மறு மதிப்பீட்டையும் தொடங்காத நிலையில், வருமான வரித்துறையின் நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர முடியாது. இந்த நிலையில் வருமான வரித்துறை நோட்டீசில் தலையிட முடியாது. சட்டப்படி மதிப்பீட்டையும், மறு மதிப்பீட்டையும் வருமான வரித்துறை மேற்கொள்ளலாம் என்று உத்தரவிட்டு கார்த்தி சிதம்பரம் மற்றும் அவவது மனைவியின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags : Karthi Chidambaram ,ID ,Muttukadu ,High Court , Karthi Chidambaram's petition against ID notice on sale of Muttukadu property dismissed: HC orders
× RELATED ராமர் கோயிலின் ₹8 ஆயிரம் கோடிக்கு வரி...