×

ஊரப்பாக்கம் அருகே பிளாட் போட்டு விற்பனை செய்யப்பட்ட ரூ.30 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: கட்டிடங்களை தரைமட்டமாக்கிய அதிகாரிகள்; பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் தாலுகா, காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் கீரப்பாக்கம் ஊராட்சியில், கீரப்பாக்கம், முருகமங்கலம், அருங்கால் ஆகிய கிராமங்களில் சுமார் 900 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதில், கீரப்பாக்கத்தில் இருந்து குமிழி செல்லும் சாலையோரத்தில் அரசுக்கு சொந்தமான 100 ஏக்கர் அரசு நிலத்தை சிலர் பிளாட் போட்டு விற்பனை செய்வதாக, தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு ஆன்லைன் மூலம் புகார் வந்தது. இதனை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து கீரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றும்படி தாம்பரம் ஆர்டிஓ மற்றும் வண்டலூர் தாசில்தாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில், ஆர்டிஓ ரவிச்சந்திரன், வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர் ரங்கன், விஏஓ தமிழ்ச்செல்வம் ஆகியோர் தலைமையில் 3 பொக்லைன் இயந்திரங்களுடன் 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை மேற்கண்ட பகுதிக்கு சென்றனர். மாமல்லபுரம் டிஎஸ்பி குணசேகரன், திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பின்னர், அரசு நிலத்தை ஆக்கிரமித்து புதிதாக கட்டப்பட்டு இருந்த வீடுகள், கடைகளை ஆகியவற்றை அதிரடியாக அகற்றினர். இதையறிந்ததும் கீரப்பாக்கம் அதிமுக முன்னாள் ஊராட்சி தலைவர் அரிகிருஷ்ணன், முன்னாள் வார்டு உறுப்பினர் வசந்தி கண்ணன் மற்றும் கிராம மக்கள் அங்கு சென்று, அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வீடுகள் மற்றும் கடைகளை இடிக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் வார்டு உறுப்பினர் வசந்தி கண்ணன் உள்பட பெண்கள் சிலர் தீ குளிப்பதற்காக கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றினர்.

உடனே, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தி, அவர்களை போலீஸ் வாகனத்தில் உட்கார வைத்தனர். சிறிது நேரம் கழித்து அவர்களை விடுவித்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  தொடர்ந்து, அவர்களிடம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தாசில்தார் ஆறுமுகம், உங்களது பெயரில் வேறு எங்கும் இடம் மற்றும் வீடு இல்லை என்றால் இந்த இடத்தை விட்டு விட்டு செல்கிறோம். இல்லாவிட்டால், ஆக்கிரமிப்புகளை அகற்றுவோம். இதை யார் தடுத்தாலும், அவர்களை கைது செய்து சிறையில் அடைப்போம் என எச்சரித்தார்.

இதையடுத்து, போலீஸ் பாதுகாப்போடு சுமார் 10 ஏக்கர் பரப்பளவு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மேலும், பாதுகாப்பு பணிக்காக குறைந்த அளவே போலீசார் வந்ததால் மீதமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாமல் வருவாய்த்துறையினர் திரும்பி சென்றனர். மீட்கப்பட்டுள்ள அரசு நிலத்தின் மதிப்பு ரூ.30 கோடி என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2013ம் ஆண்டு தாசில்தார் ஆறுமுகம், வருவாய் ஆய்வாளராக இருந்தபோது மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட கடம்பூர் பகுதியில் 368 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டிய வீடுகள், கடைகளை இடித்து ஆக்கிரமிப்புகளை அகற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Urappakkam , Recovery of Rs 30 crore worth of government land for sale in a flat near Urappakkam: Officials leveled buildings; Excitement as the women tried to set fire
× RELATED சென்னை அடுத்த ஊரப்பாக்கம் ரயில்...