×

நீட் தேர்வு ஆய்வு குழுவை எதிர்த்து வழக்கு ஒன்றிய அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஒன்றிய அரசு பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வு பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக  ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக்கோரி தமிழக பாஜ பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், தமிழக அரசு சார்பில் மருத்துவ மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிற்கு 84,343 மனுக்கள் வந்துள்ளன. நீட் பாதிப்பு குறித்து பெற்றோரும், மாணவர்களும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். மனுதாரர் ஒரு மாணவரோ, பெற்றோரோ இல்லை. அரசியல் கட்சியின் நிர்வாகியான அவர் விளம்பரத்திற்காக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். குழு நியமனத்தில் அரசியல் சாசனத்தின் எந்த அடிப்படை உரிமையும் மீறப்படவில்லை. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தங்களையும் இணைக்க கோரி திமுக, மதிமுக உள்பட பல்வேறு கட்சிகள், அமைபுகள் இடையீட்டு  மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன் வாதிடும்போது, ஏற்கனவே மக்கள் மனுதாரரை எந்த இடத்தில் வைத்துள்ளனர் என்பதை காட்டிவிட்டார்கள். இப்போது இந்த நீதிமன்றமும் மனுதாரரின் நிலையை காட்ட வேண்டியுள்ளது. இரு தரப்புக்கும் இடையேயான சித்தாந்த மோதல்தான். இந்த வழக்கில் பொதுநலம் எதுவும் இல்லை. விளம்பரத்திற்காக தொடரப்பட்டுள்ளது.

நீட் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைத்தபோது மனுதாரர் அமைதியாக இருந்தார். காரணம் அப்போது அதிமுகவுடன் பாஜ கூட்டணி வைத்திருந்ததே. இதுபோன்ற குழு ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்னாலும் இதுபோன்ற குழு அமைக்கப்பட்டிருக்கிறது என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், வரும் 8ம் தேதிக்குள் ஒன்றிய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்கவுள்ளதால் விசாரணையை வரும் 13ம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம் என்றும் உத்தரவிட்டனர். நீட் தொடர்பான இந்த வழக்கு இரு தரப்புக்கும் இடையேயான சித்தாந்த மோதல்.

Tags : High Court ,Union Government ,NEET Examination Review Committee , The High Court ordered the Union Government to respond to the case against the NEET Examination Review Committee
× RELATED எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும்...